உத்தரப் பிரதேசத்தில் 60க்கும் மேற்பட்ட குற்றவழக்குகளில் காவல் துறையினரால் தேடப்பட்ட வந்த விகாஸ் துபே, கான்பூர் அருகே உள்ள பிக்ரு கிராமத்தில் பதுங்கியிருப்பதாக காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து விகாஸ் துபேவை கைதுசெய்யச் சென்ற எட்டுக் காவலர்களை, துபே மற்றும் அவரது கூட்டாளிகள் கடந்த ஜூலை மூன்றாம் தேதி சுட்டுக்கொலை செய்தனர். இச்சம்பவம் நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் விகாஸ் துபேவின் கூட்டாளிகள் 5 பேர் பல்வேறு இடங்களில் காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து ஜூலை 9ஆம் தேதி கைது செய்யப்பட்ட விகாஸ் துபே தப்பிக்க முயன்ற நிலையில் அவரை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றதாக காவலர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் எட்டு காவலர்களை சுட்டுக் கொல்ல விகாஸ் துபேவிற்கு ஆயுதங்களை வழங்கியதற்காக அவரது ஃபைனான்சியர் ஜெய் பாஜ்பை நேற்று இரவு (ஜூலை 19) கைது செய்யப்பட்டார்.
கான்பூரில் பிரபல தொழிலதிபரான இவர் விகாஸ் துபேவிற்கு ஃபைனான்சியராக செயல்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு கைது செய்யப்பட்ட அவர் இன்று சிறைக்கு கொண்டு செல்லும் போது, விகாஸ் துபேவுடன் கான்பூர் மற்றும் உன்னால் தொகுதியைச் சேர்ந்த மூன்று பாஜக எம்எல்ஏக்கள் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக நமது ஈடிவி பாரத்திடம் தெரிவித்துள்ளார். இருப்பினும் விகாஸ் துபேவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மூன்று எம்எல்ஏக்களின் பெயரை அவர் தெரிவிக்கவில்லை.
இதையும் படிங்க: கோவிட்19 பரிசோதனையில் வெற்றிகண்ட ஆக்ஸ்போர்டு பல்கலை!