தேசிய ஆட்டோமொபைல் சங்கத்தின் முன்னாள் தலைவர் நிகுஞ்ச் சங்கி ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், “நாடு தழுவிய முழு அடைப்பு காரணமாக ஆட்டோமொபைல் துறை உள்பட அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் ஆட்டோமொபைல் துறைக்கு மூவாயிரம் கோடி ரூபாய் வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.
நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக ஆட்டோமொபைல் தொழில் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய ஈடிவி பாரத் செய்தியாளர், தேசிய ஆட்டோமொபைல் சங்கத்தின் முன்னாள் தேசியத் தலைவரும், பிரதமர் திறன் மேம்பாட்டு திட்டத்தின் தேசிய செயலாளருமான நிகுஞ்ச் சங்கியுடன் சிறப்பு உரையாடலை நடத்தினார்.
அப்போது, “ஆட்டோமொபைல் தொழில் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது” என்று நிகுஞ்ச் சங்கி கூறினார். அதன்படி, முதலிடத்தில் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் வருகிறார்கள். பின்னர் உதிரி பாகங்கள் மற்றும் பிற பொருட்களை தயாரிக்கும் நபர்கள் வருகிறார்கள். மூன்றாவதாக ஆட்டோமொபைல் விற்பனையாளர்களும் உள்ளனர். நாடு முழுவதும் இந்த மூன்று துறைகளை நம்பி லட்சக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்துவருகின்றன. நாட்டின் முடக்கம் காரணமாக இவர்கள் அனைவரும் நிதி இழப்பை எதிர்கொள்கின்றனர்” என்றார்.
(ஈடிவி பாரத்துக்கு நிகுஞ்ச் சங்கி அளித்த பேட்டியை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே சொடுக்கவும்)
முழு அடைப்பு காரணமாக ஆட்டோமொபைல் துறை சந்தித்த பாதிப்புகள் மற்றும் இழந்த வருவாய் குறித்து நிகுஞ்ச் சங்கி மேலும் கூறியதாவது:-
வரி விவகாரம்
நாடு தழுவிய முழு அடைப்பினால், தொழில் முற்றிலும் ஸ்தம்பித்துவிட்டது. ஆனாலும், வர்த்தகர்கள் பல செலவுகளை எதிர்கொண்டனர். உதாரணமாக வர்த்தகர்கள் அரசுக்கு வரி செலுத்த வேண்டும். மேலும் மின்சார பில், வாடகை, கடன் தவணை உள்ளிட்ட பல செலவுகளை ஒரு உரிமையாளர் ஒவ்வொரு மாதமும் சந்திக்கிறார்.
ஊழியர்களுக்குச் சம்பளம்
நாடு முடக்கத்தின் (லாக்டவுன்) போது கூட ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. ஏனெனில், ஒரு தொழிலாளியின் முழு குடும்பமும் வியாபாரி, வணிகர், உரிமையாளர் அல்லது தொழிலதிபரை சார்ந்து இருக்கிறார்கள். அவர்களது முழு குடும்பத்தின் செலவுகளும் மாதச் சம்பளத்திலிருந்து மட்டுமே செலவாகிறது. அத்தகையச் சூழ்நிலையில், முழு அடைப்பின் போது ஊதியம் வழங்கப்படாவிட்டால் ஊழியர்களுக்கு பிரச்னைகள் ஏற்படக்கூடும். இதனால் வணிகர், தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டு, ஏதோவொரு வகையில் வேலையை நடத்தி வருகிறார். சில நேரங்களில் இதற்காக அவர் கடனும் வாங்க வேண்டியது இருக்கும். இந்தப் பிரச்னை தொடர்பாக அரசாங்கத்துடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் இ.எஸ்.ஐ. (ESIC) ஊழியர்களின் சம்பளத்திலிருந்து கழிக்கப்படுகிறது. ஆக, டெபாசிட் செய்ய வேண்டிய தொகை மத்திய அரசிடம் அதிகம். ஆகவே இ.எஸ்.ஐ. அளவுடன் ஊழியர்களுக்கு உதவுமாறு அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆட்டோமொபைல் துறை ஒரு சங்கிலியாக செயல்படுகிறது. இந்தச் சங்கிலி ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது. ஆகவே முழு அடைப்பு காரணமாக ஒட்டுமொத்த தொழிற்துறையும் பெரும் இழப்பைச் சந்தித்து வருகிறது.
ஷோ ரூம்கள் திறப்பு
ஒரு ஆட்டோமொபைல் ஷோ ரூம்கூட திறக்க அனுமதி வழங்கப்படாத பல பசுமை மண்டலங்கள் நாட்டில் உள்ளன. சில சிவப்பு மண்டலங்களிலும் ஷோ ரூம்கள் திறக்கப்படுகின்றன. இது அந்தந்த மாவட்ட நிர்வாகத்தைப் பொறுத்தது. முழு அடைப்பின் போது, மாநில எல்லைகள் சீல் வைக்கப்படுகின்றன. ஆகவே இது வணிகத்தை பாதிக்கிறது. அதாவது ஷோ ரூம் திறந்த பிறகும் வேலை பாதிக்கப்படுகிறது.
இந்த நிலைமையைக் கருத்தில் கொள்ளும்போது, இதன் விளைவு நாட்டில் சில காலம் காணப்படும் என்று நினைக்கிறேன். எனவே, முழு அடைப்பை நீக்குவது அவசியம். அதேபோல் மக்கள் செயல்பாடு அதிகரிக்க வேண்டும். கரோனா வைரஸ் காரணமாக, முழு அடைப்பு விதிக்கப்பட்டது பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்தது. இதனால் ஆட்டோமொபைல் துறையில், மூவாயிரம் கோடி ரூபாய் வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே முழு அடைப்பை நீக்குவது அவசியம்.
இவ்வாறு ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் நிகுஞ்ச் சங்கி கூறினார்.
இதையும் படிங்க: 'இந்தியாவின் அபாயத்தை ஜிடிபி பிரதிபலிக்கிறது'- மூடிஸ்