மலேசிய அரசியலில் கடந்த சில மாதங்களாகவே குழப்பம் நிலவிவருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் மலேசியா பிரதமர் மஹாதீர் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து அந்நாட்டு பிரதமராக முஹ்யிதின் பதவியேற்றார்.
புதிதாகப் பொறுப்பேற்ற முஹ்யிதினும் மஹாதீர் கட்சியைச் சேர்ந்தவர் என்ற நிலையில், இருவருக்கும் கட்சியில் கருத்துமோதல் நிலவியது. இந்நிலையில் இருவரும் தங்கள் தரப்பை பலப்படுத்திக்கொள்ள எதிர்க்கட்சியுடன் கைகோர்த்து செயல்பட்டுவருகின்றனர்.
இந்நிலையில், மஹாதீரின் பி.பி.பி.எம். கட்சி அவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்த கட்சியின் செயலாளரான சுஹைமி யஹாயா எழுதிய கடிதத்தில், மஹாதீர் கடந்த மே 18ஆம் தேதி எதிர்க்கட்சியினருடன் இணைந்து நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். இது கட்சி சட்டவிதிகளுக்கு விரோதமானது. எனவே, கட்சியிலிருந்து நீக்கி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் தொடர்பாக முன்னாள் பிரதமரான மஹாதீர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஹாங்காங் மீதான பிடியை இறுக்கும் சீனா: சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்!