டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்பாளர்களுக்கும் இடையே வடகிழக்கு டெல்லியில் பிப்ரவரி 24ஆம் தேதி நடந்த கலவரத்தில் 53 பேர் உயிரிழந்தனர்.
200க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். அதில், இரவர் காவலர்கள். இவர்கள் தவிர 108 காவலர்களும் காயமுற்றனர். இந்தக் கலவரத்தில் 751 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 1575 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 250க்கும் மேற்பட்ட குற்ற பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் 1153 பேர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யூ) முன்னாள் மாணவர், உமர் காலித்திடம் 2 மணி நேரம் டெல்லி சிறப்பு பிரிவு காவலர்கள் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து உமர் காலித்திடம் ஞாயிற்றுக்கிழமையும் (செப்.13) காவலர்கள் மீண்டும் 11 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணைக்கு பின்னர் உமர் காலித் கைதுசெய்யப்பட்டார்.
இதையடுத்து உமர் காலித் திங்கள்கிழமை (செப்.14) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். உமர் காலித் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த உமர் காலித் கைது