இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் கங்ரா மாவட்டத்தில் உள்ள ஜவாலி சட்டப்பேரவைத் தொகுதியின் காங்கிரஸ் முன்னாள் உறுப்பினர், நீரஜ் பார்தி. அம்மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகராக வலம் வரும் இவர், சர்ச்சைகளுக்கு பெயர்போன அரசியல் பிரமுகராக விளங்கி வருகிறார்.
இவரது தந்தையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சந்திர குமார், இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் இதர பிற்படுத்தப்பட்டோர் சமூக மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
இந்நிலையில், சமீபத்தில் நடந்தேறிய இந்தியா - சீனா எல்லை மோதல் விவகாரம் தொடர்பாக, நீரஜ் பார்தி தனது சமூகவலைதள பக்கங்களில் இவர் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வந்தார். அது தொடர்பாக, பாஜகவினர் கொடுத்த புகாரின் பேரில், சிஐடி காவல் துறையினர், மூன்று தினங்களுக்கு முன்னர் நீரஜை விசாரணைக்காக அழைத்துள்ளனர்.
தொடர்ந்து மூன்று நாள்களாக இந்த விசாரணை நீடித்து வந்த நிலையில், இன்று நீரஜ் குமார் மீது 124-A (தேசதுரோக வழக்கு), 153-A (இரு பிரிவினருக்கிடையே விரோதத்தைத் தூண்டுதல்) உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவரைக் கைது செய்த காவல் துறையினர், மாவட்ட நீதிபதி முன்பு மாலைக்குள் அவர் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். இந்த விவகாரம் அம்மாநில அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.