மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் 57 பேர் நேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்நிலையில், மத்திய அமைச்சர்களின் துறைகள் இன்று அறிவிக்கப்பட்டன.
இதில் கடந்த முறை அமைச்சரவையில் பதவி வகித்த ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி உள்ளிட்டோரின் துறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
கடந்த முறை உள் துறை அமைச்சராக பதவி வகித்த ராஜ்நாத் சிங்கிற்கு தற்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவி வகித்த நிர்மலா சீதாராமனுக்கு நிதித் துறை வழங்கப்பட்டுள்ளது. ஜவுளித் துறை அமைச்சராக பொறுப்பு வகித்த ஸ்மிருதி இரானிக்கு இந்த முறை கூடுதலாக மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இம்முறை உடல்நலக்குறைவு காரணமாக நிதியமைச்சராக இருந்த அருண் ஜேட்லி, வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ், உமா பாரதி ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.