கரோனா வைரஸ் நோயின் தாக்கம் தொடர்ந்து தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகள் கரோனாவின் கோர தாண்டவத்தில் சிக்கித் தவித்துவருகின்றன.
இதனிடையே, 32 நாடுகளைச் சேர்ந்த 239 விஞ்ஞானிகள் உலக சுகாதார அமைப்புக்கு கடிதம் எழுதினர். அதில், பெருந்தொற்று காற்றில் பரவுவதற்கு ஆதாரங்கள் உள்ளன. சிறு துகள்கள் மூலம் கூட கரோனா பரவலாம் என தெரிவித்தனர்.
இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சிறப்பு பணி அலுவலர் ராஜேஷ் பூஷண் கூறுகையில், "கரோனா பற்றிய தகவல்களை உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருக்கிறது. இது தொடர்ந்து பரிணமித்துக் கொண்டிருக்கிறது. நாம் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம் என்பதை உணர வேண்டும். தகுந்த இடைவெளியை கடைபிடித்து முகக்கவசத்தை அணிய வேண்டும் என பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்.
நீண்ட காலம் காற்றிலிருக்கும் சிறு துகள்களில் இருந்து நம்மை பாதுகாக்க இதுபோன்ற வழிகாட்டுதல்கள் உதவும்" என்றார்.