புனே: முழு முதற் கடவுளாக கருதப்படும் விநாயகப் பெருமானின் சதுர்த்தி தினம், நாடு முழுவதும் நேற்று (ஆக.22) கொண்டாடப்பட்டது.
தொடர்ந்து இது தொடர்பான கொண்டாட்டங்கள் நாடு முழுக்க களைகட்டியுள்ளன. எனினும் கரோனா நோய்த்தொற்று பரவல் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.
விநாயக பெருமானின் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு ஈடிவி பாரத் ஒவ்வொரு நாளும் புகழ்பெற்ற விநாயகர் சன்னதிகள் குறித்து அலசிவருவது நாம் அறிந்ததே.
அந்த வகையில் இன்று புனே நகரில் வீற்றிருந்து அருள் பாலிக்கும், “ஸ்ரீமந்த் தக்துஷேத் ஹல்வாய் கணபதி கோயில்” குறித்து பார்க்கலாம்.
வரலாற்று ரீதியாக சிறப்பு பெற்ற இந்தக் கோயில், ஆங்கிலேயருக்கு எதிரான நாட்டின் சுதந்திர போராட்டத்தோடும் பெரும் தொடர்புடையது. ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கோயிலில் நடக்கும் விநாயகர் சதுர்த்தி விழாக்கள் மிக பிரம்மாண்டமாக இருக்கும். புனே மட்டுமின்றி அதன் அருகாமை நகரங்களிலும் இருந்தும் மக்கள் வெகுதிரளாக பங்கேற்பார்கள்.
ஆனாலும், இக்கோயிலின் வளமான பாரம்பரியத்தை வெகுசிலரே அறிந்துள்ளனர். இந்தக் கோயில் 1800ஆம் ஆண்டுகளில் தக்துஷேத் ஹல்வாய் என்பவரால் கட்டப்பட்டது.
தனவந்தரான தக்துஷேத் மிட்டாய் கடை நடத்திவந்தார். அந்த வியாபாரத்தில் வந்த வருமானத்தைக் கொண்டு, கணபதிக்கு அழகான இந்தக் கோயிலை எழுப்பினார். ஆகவே அவரின் பெயராலும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.
இந்தக் கோயிலில் உள்ள மூலவர் விநாயக பெருமானின் சிலை களிமண் மற்றும் பளிங்கு கற்களால் ஆனது.
இந்தச் சிலையை ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தின்போது, பால கங்கார திலகர் வழிபட்டார். இங்கிருந்தான் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை தொடங்கினார். மேலும் இந்தக் கோயிலில் தவறாது வழிபாடும் நடத்திவந்தார்.
இந்தச் சிலை தற்போது சுக்ரவர் பேத் என்ற பகுதியிலுள்ள அனுமார் கோயிலில் வைக்கப்பட்டு, தினந்தோறும் பூஜைகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், 1896ஆம் ஆண்டுகளில் ஸ்ரீமந்த் தக்துஷேத் ஹல்வாய் கணபதி கோயிலில் மற்றொரு கணபதி சிலை நிறுவப்பட்டது. அதன்பின்னர் வயது மூப்பு காரணமாக மிட்டாய் வியாபாரி தக்துஷேத் ஹல்வாயும் காலமாகிவிட்டார்.
அவருக்கு பின்னர் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை மக்களே முன்னின்று உணர்வுப்பூர்வமாக எடுத்து நடத்தி வருகிறார்கள்.
இந்த விழாவுக்கு சுவர்நாயக் தருண் மண்டல் ஏற்பாடுகளை செய்கிறது. இந்நிலையில், 1967 ஆம் ஆண்டு ஸ்ரீமந்த் தக்துஷேத் ஹல்வாய் கணபதியின் 75 ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பிரதாப் கோட்சே புதிய விநாயகர் சிலை ஒன்றை நிறுவினார்.
இன்று நாம் காணும் சிலை 1967 இல் நிறுவப்பட்டது. இந்த விநாயகர் கோயில் மற்ற கோயில்களை காட்டிலும் வேறுபட்டது. ஆம்.. விநாயகர் சதுர்த்தி நன்நாளில் மற்ற கோயில்களின் மாதிரி குடில்களும் இங்கு நிறுவப்படும்.
இதன் நோக்கம் பக்தர்கள் அனைத்து புனித தலங்களையும் தரிசிக்க வேண்டும் என்பதே.
மேலும், சதுர்த்தி தினக் கொண்டாட்டம் 10 நாள்கள் நடக்கும். அன்றைய தினங்களில் கோயில் முழுவதும் அலங்கார விளக்குகளால் ஒளிரூட்டப்படும், வெவ்வேறு வகையான பூக்கள் கொண்டும் கோயில் அலங்கரிக்கப்படும்.
இந்தக் கோயிலில் மற்றொரு சிறம்பம்சம் என்னவென்றால் இது நவீன காலத்திற்கு ஏற்ப உள்ளது. அதாவது நவீனத்துவத்தின் அறிவொளியை மக்களுக்கு வழங்குகிறது.
இருப்பினும், இந்த ஆண்டு கொண்டாட்டம் தொற்றுநோய் காரணமாக ஒரு முழுமையானதாக இல்லை. எனினும் இந்தக் குறை பக்தர்களுக்கு எட்டாத வகையில், தக்துஷேத் ஹல்வாய் சர்வஜனிக் கணபதி அறக்கட்டளை கோயில் வளாகத்தில் விநாய பெருமான் சிலை ஒன்றை நிறுவி உள்ளது.
கரோனா நெருக்கடி காலம் என்பதால், கடந்த காலங்களை போல் கோயிலை சுற்றி பெரிய பெரிய பந்தல்கள் அமைக்கப்படவில்லை. முதல் முறையாக 127 ஆண்டுகால கொண்டாட்டத்தில் சிறிது சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கோயில் அறங்காவலர் மகேஷ் சூர்யவன்ஷி கடந்த 10 ஆம் தேதி கூறுகையில், “கோயிலிலும் கூட்டம் வருவதைத் தவிர்க்க, விநாயக பெருமானின் ஆன்லைன் தரிசனத்துக்கு அனுமதி அளித்துள்ளோம். கோயிலுக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள்” என்றார்.
இதையும் படிங்க: வேழ முகத்தோனின் வியத்தகு ஆலயம்; அதிசயங்கள் நிறைந்த ஆன்மிக குகை!