ஆவணி மாத அமாவாசைக்கு பிறகு வரும் சதுர்த்தி தினத்தில் விநாயகர் அவதரித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 22ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
நாட்டில் விநாயகருக்கு பல்வேறு கோயில்கள் இருந்தாலும், மத்தியப் பிரதேச மாநிலம், ஜவாசா கிராமத்தில் உஜ்ஜைனிலிருந்து எட்டு கி.மீ தூரத்தில் உள்ள கிஷிப்ரா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள சிந்தமன் கணேஷா கோயிலுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு.
“மனக் குழப்பத்தோடு தேடி வருவோருக்கு மன நிறைவு அளிக்கும் கடவுள்” என இங்கு குடிக்கொண்டுள்ள விநாயகரை பக்தர்கள் நம்புகின்றனர்.
தசரத மன்னனின் மறைவுக்குப் பின்னர், ராம பிரான் மனைவி சீதாதேவி, சகோதரன் லட்சுமணனுடன் இங்கு வந்து வழிபட்டுள்ளார் என்பதும் இங்குள்ள பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை.
உஜ்ஜைனி விநாயகர் கோயிலில் விநாயகப் பெருமான், தனது மனைவியர் ரித்தி, சித்தி இருவரோடும் அருள் பாலிக்கிறார். பக்தர்கள் மூன்று முறைகளில் வழிபாடு நடத்துகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் தங்களது வழிபாடு பூர்த்தியடையும் என்பது அவர்களின் நம்பிக்கை.
இந்தக் கோயிலில் விநாயகர் சதுர்த்தியன்று பெருமளவு மக்கள் கூடி வழிபாடு நடத்துவார்கள். மற்ற தினங்களிலும் பக்தர்களின் வருகைக்கு குறைவிருக்காது. உஜ்ஜைனி ஆற்றங்கரையோரம் கோயில் அமைந்திருப்பதால், சுற்றுலாவாசிகளின் வருகைக்கும் இங்கு பஞ்சமிருக்காது.
இதையும் படிங்க: பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் முக்கண் விநாயகர்!