கரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் முழு ஊரடங்கை எவ்வாறு சமாளிக்கிறார்கள் என்பது குறித்து திருவனந்தபுரம் சங்குமுகம் கடற்கரை காவல் துணை ஆணையர் ஐஸ்வர்யா டோங்ரே ஈடிவி பாரத்திடம் பிரத்யேகமாக பேட்டியளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கியிருந்த முகாம்களை பார்வையிட்டேன். அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்தேன். அதனை புரிந்துகொண்டு தேவைகள் நிறைவேற்றப்படுகிறது. இது எனக்கு மன திருப்தியை அளிக்கிறது.
சுமார் 600 முதல் 800 தொழிலாளர்களுக்கு ஒரு மணிநேரம், கரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்தத் தருணங்கள் திருப்திகரமானதாக உள்ளன.
மக்கள் நன்றி தெரிவிக்கும்போது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நம் பணியை சரியாக செய்கிறோம் என்ற உணர்வு ஏற்படுகிறது. அது எனக்கு சாதனையாக தெரிகிறது” என்றார்.
ஊரடங்கு சூழ்நிலை குறித்து கேட்டதற்கு, “மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும்போதும் தகுந்த இடைவெளியை கடைபிடிக்கின்றனர். திருவனந்தபுரம் காவலர்களால் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. மக்களின் பிரச்னைகளுக்கு காவலர்கள் தொடர்ந்து தீர்வு கண்டு வருகின்றனர்” என்றார்.
பெண் ஐ.பி.எஸ் அதிகாரி என்பது குறித்து பேசிய ஐஸ்வர்யா, “பாலின அடிப்படையில் எந்தவொரு வேறுபாட்டையும் நான் கடுமையாக மறுக்கிறேன். நான் இந்திய காவல் துறையில் சேர்ந்ததும் பாலினத்தைப் பொருட்படுத்தாமல் அலுவலர்களாகவே செயல்படுகிறோம். கடமைக்கும் பாலினத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்றார் கம்பீரமாக.
இந்த துறையை பொருத்தவரை எண்ணிக்கையில் ஆண்களைவிட பெண்கள் குறைவாகவே உள்ளனர். ஆனால், பாகுபாடு காட்டுவதாக எதுவும் இல்லை. பெண்களும் ஆண்களைப் போலவே கடினமாக உழைக்கிறார்கள். எங்களுக்கு இருக்கும் உணர்வுகளால், மக்களுடன் எளிதில் இணைய முடிகிறது. எல்லா பெண்களும் வலுவானவர்கள் என்பதை உணர வேண்டும். பாலினத்திற்கு அப்பாற்பட்ட தங்களின் அடையாளத்தை காணவேண்டும்” என்றார் உற்சாகமாக.
கேரள மக்களைப் பற்றி பேசிய அவர், 'கேரள மக்கள் தங்கள் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் பற்றி நன்கு அறிந்திருக்கிறார்கள். அவர்களும் மிகவும் அன்பானவர்கள். நான் மொழியையும் கலாசசாரத்தையும் கற்றுக் கொண்டிருக்கிறேன். கேரளாவை சிறந்த இடமாக மாற்ற நாங்கள் ஒன்றிணைந்து செயல்டுவோம்” என்றார்.
தனது சொந்த மாநிலமான மகாராஷ்டிரா குறித்த தனது கவலையை வெளிப்படுத்திய ஐஸ்வர்யா, “மகாராஷ்டிராவில் கோவிட் -19 நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. நான் எனது சொந்த ஊரை நினைக்கிறேன். ஆனால் இது எனது பணியின் ஒரு பகுதியாக இருப்பதால், இதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை” என்றார்.
இதையும் படிங்க: 'கண்ணியமான நடத்தை, உறுதியான செயல்'- ஜபிஎஸ் மகேஷ் பகவத் சிறப்பு பேட்டி!