சீனாவுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக டெல்லியை அடுத்துள்ள பிதாம்புராவைச் சேர்ந்த சுயாதீன பத்திரிகையாளர் ராஜீவ் ஷர்மாவை (61) டெல்லி காவல்துறையினர் கடந்த செப்.14ஆம் தேதி கைது செய்தனர்.
பிதாம்புரா பகுதியில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்ற சோதனையில், மின்னாக்கம் செய்யப்பட்ட இந்திய பாதுகாப்பு தொடர்பான சில ரகசிய ஆவணங்கள், கோப்புகள், மடிக்கணினி ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், அவருடன் இணைந்து பணியாற்றிவந்த சீனாவைச் சேர்ந்த கிங் ஷி, நேபாளைச் சேர்ந்த ஷெர் சிங் ஆகியோரையும் டெல்லி சிறப்பு காவல்துறை கைது செய்துள்ளது.
இந்தியாவின் பாதுகாப்புத் துறை சார்ந்த ரகசியத் தகவல்களை சீனாவுக்கு பணத்திற்காக அளித்துவந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவர்கள் மூவர் மீதும் அதிகாரப்பூர்வ ரகசியங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் மூவரையும் நீதிமன்றக் காவலில் எடுத்து, விசாரணை மேற்கொள்ள காவல்துறையினருக்கு தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இது தொடர்பாக டெல்லி இணை காவல் ஆணையர் சஞ்சீவ் யாதவ் கூறுகையில், "இந்தியாவின் பாதுகாப்புத் துறைச் சார்ந்த ரகசியத் தகவல்களை திருடிய ராஜீவ் ஷர்மா, கிங் மற்றும் ஷெர் சிங் ஆகியோரின் மூலமாக சீன உளவுத்துறையினருக்கும் அனுப்பி வந்துள்ளார்.
தொடர்ந்து முக்கியமான பாதுகாப்பு தகவல்களை சீனாவுக்கு அனுப்பி வரும் ஷர்மாவுக்கு ஹவாலா முறையில் அதற்கான கைமாறாக பெருந்தொகை வழங்கப்பட்டுவந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
ஷர்மாவுக்கு ஒரு வெளிநாட்டு புலனாய்வு அலுவலர் ஒருவருடன் நெருங்கியத் தொடர்பு இருப்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு உறவுகள் பற்றிய முக்கியமான தகவல்களை தெரிவிப்பதற்காக சட்டவிரோத வழிமுறைகள் மற்றும் வெஸ்டர்ன் யூனியன் பணப் பரிமாற்றம் மூலம் அவர் பணத்தைப் பெற்றுவந்துள்ளார்.
வெளிநாட்டு முகவர்களுடனான தொடர்பு கொண்டிருந்த அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள காவல்துறை முடிவு செய்துள்ளது.
சீனாவின் குன்மிங் நகரை தளமாகக் கொண்ட தனது சீன கையாளுபவர்களான மைக்கேல் மற்றும் ஜார்ஜ் ஆகியோருக்கு வெவ்வேறு டிஜிட்டல் சேனல்கள் மூலம் அவர் அனுப்பி வந்துள்ளது முதல்கட்ட விசாரணையில் வெளியாகியுள்ளது" என தெரிவித்தார்.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலால் நிறுவப்பட்டு தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி தலைமையில் இயங்கிவரும் விவேகானந்தா இன்டர்நேஷனல் பவுண்டேஷன் எனும் அமைப்பின் தலைமை செய்தி ஆசிரியராக ராஜீவ் ஷர்மா பணியாற்றி வந்திருப்பது கவனிக்கத்தக்கது.