இந்தியாவின் பிரபல தொழிலதிபரான அனில் அம்பானியின் ஆர்காம் என்னும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தொலைத்தொடர்பு சேவையில் எரிக்சன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.
ஆனால் ஆர்காம் நிறுவனம் பல்வேறு கடன் சுமையில் தத்தளித்ததால், அந்த நிறுவனம் தனக்கு தர வேண்டிய ரூ.1,600 கோடியை வழங்க வேண்டும் என எரிக்சன் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், எரிக்சன் நிறுவனத்துக்கு ஆர்காம் நிறுவனம் ரூ.550 கோடி கொடுக்க வேண்டுமென தீர்ப்பளித்தது.
இருப்பினும், அனில் அம்பானி எரிக்சனுக்கு கொடுக்க வேண்டிய ரூ.550 கோடியை இன்னும் வழங்காமல் இருக்கிறார். இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அனில் அம்பானி மீது எரிக்சன் தொடர்ந்தது. இந்த வழக்குக்காக அவர் நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானார். மேலும் தனது நிறுவனம் திவாலாகிவிட்டதாகவும் அம்பானி ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ரஃபேல் விமானங்களுக்கு முதலீடு செய்ய பணம் இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்திடம், எரிக்சன் நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய ரூ.550 கோடி பணம் இல்லையா? என அந்நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் துஷ்யந்த் தவே உச்ச நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார். முன்னதாக இந்த தொகைக்கு ஆண்டுக்கு 12 விழுக்காடு வட்டி போட்டு எரிக்சன் நிறுவனத்துக்கு அம்பானி கொடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.