இந்தியா முழுவதும் ஆங்கிலேயர்கள் ஆண்டு கொண்டிருந்த நேரத்தில் புதுவையை பிரெஞ்சுக்காரர்கள் ஆண்டு வந்தனர். 200 ஆண்டுகளுக்கு முன்பே, புதுச்சேரி கடற்கரையை ஒட்டி குடியிருப்புகளை அமைத்து அழகிய நகரை உருவாக்கினர். புல்வார் என்று அழைக்கப்படும் இந்நகரில், புதுவை ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை ,அரவிந்தர் ஆசிரமம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இங்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட தெருக்கள் நேர்கோட்டில் இருக்கின்றன. புல்வார் பகுதியில் ஆங்கில எழுத்தான யூ வடிவத்தில் மூன்று கால்வாய்கள் நகரில் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து தெருக்களிலும் இருந்து வரும் மழைநீர் இந்த வாய்க்காலில் சேர்ந்து நேரடியாக கடலுக்கு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பொறியியல் கல்லூரிகளின் பாடத்திட்டத்திலும் இக்கட்டடக்கலை குறித்து சேர்க்கப்பட்டுள்ள நிலையில், பெங்களூர் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள், கடந்த ஒருவாரமாக பிரெஞ்சு கட்டடக் கலை நுணுக்கங்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். தங்கள் கல்லூரிகளில் ஆய்வுக்கட்டுரைகளை சமர்பிப்பதற்காக கலைநயமிக்க ஒரு கட்டடத்தின் முன்பு சாலையில் அமர்ந்து, அவர்கள் அதன் மாதிரியை வரைந்தனர்.
இதுகுறித்து, பெங்களூர் தனியார் கல்லூரி மாணவி ஸ்ரீமதி கூறுகையில், ” புதுச்சேரியின் கட்டடங்கள் மிக உயர்ந்த கட்டடங்களாகவும், அகலமான தூண்களைக் கொண்டதாகவும், பிரெஞ்சு பாரம்பரியத்தை எடுத்துக் காட்டுவதாகவும் உள்ளன. உயர்ந்த ஜன்னல்கள், உயர்ந்த கதவுகள் என காற்றோட்ட வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்புகள். பெரும்பாலும் மஞ்சள் நிற வண்ணங்களால் கட்டடங்கள் தோற்றமளிக்கின்றன. எங்கள் பாடத்திட்டத்தில் இவை குறித்து சேர்த்துள்ளார்கள். நாங்கள் பிரான்ஸ் கட்டடக்கலையை, பிரான்ஸ் நாட்டுக்குச் சென்று கற்பதை விட, அருகில் உள்ள புதுச்சேரியில் அதன் கட்டடத் தன்மையை அறிந்து கொள்ள எளிதாக உள்ளது “ என்று கூறினார்.
இதையும் படிங்க: அண்ணாவின் 51ஆவது நினைவுதினம்: புதுச்சேரியில் அரசியல் கட்சியினர் மரியாதை