ஸ்ரீநகர் (ஜம்மு-காஷ்மீர்): பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பழைய விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ரங்கிரெத்தில் பயங்கரவாதிகள் இருப்பதாக பாதுகாப்புத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், பாதுகாப்புப் படையினர் அந்த பகுதியைச் சுற்றி வளைத்து, தேடுதல் வேட்டை நடத்தியதாக காஷ்மீர் ஐ.ஜி.பி விஜய் குமார் தெரிவித்தார்.
பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, பயங்கரவாதிகள், அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவ அலுவலர் ஒருவர் தகவல் தெரிவித்தார். மேலும், இந்த சண்டையின்போது, சில இளைஞர்கள் சேர்ந்து பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் தெரியவந்துள்ளது. அதில், ஒருவரைப் பிடித்து ராணுவத்தினர் விசாரணை நடத்திவருகின்றனர்.