தெலங்கானாவில் 27 வயதான பெண் கால்நடை மருத்துவர், நான்கு பேரால் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டார். அவரின் உடல் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டது. இது நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் காவலர்கள் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தக் கொலையில் ஈடுபட்ட லாரி ஓட்டுநர் உள்பட நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்கள் கடந்த 6ஆம் தேதி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, காவலர்கள் நடத்திய என்கவுன்டரில் கொல்லப்பட்டனர்.
காவலர்களிடமிருந்து துப்பாக்கியைப் பறித்து சுட்டதால் என்கவுன்டர் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகக் காவலர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த என்கவுன்டர் குறித்து இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. காவலர்களின் நடவடிக்கைக்கு எதிராக மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
மாநில அரசின் சார்பில் 8 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த பெண் சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் என்கவுன்டர் நடவடிக்கைக்கு எதிராகப் பேசும் காணொலிக் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போன்று பரவிவருகிறது.
அந்தக் காணொலிக் காட்சியில் தோன்றுபவர் தெலங்கானா ராஷ்டிர சமிதி சட்டப்பேரவை உறுப்பினர் சுனிதா. அதில் சுனிதா, தெலங்கானா என்கவுன்டரில் கொல்லப்பட்ட இளைஞர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதுபோல் உள்ளது. 'என்கவுன்டரில் கொல்லப்பட்ட நான்கு பேரின் தாயார் மனது எவ்வளவு கவலைகொள்ளும்' என்ற சுனிதா, தாங்க முடியாத துயரத்தை கொடுத்து இருக்கும் என்கிறார்.
மேலும் கடமையைச் சரியாகச் செய்யாத காவலர்களை அவர் கடிந்துகொள்கிறார். இந்தக் காணொலி காட்சிகள் தெலங்கானா, ஆந்திராவின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவருகிறது. இது இருமாநிலங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தெலங்கானா காவல் துறையினரைப் பாராட்டி மணல் சிற்பம்!