நாட்டின் பொதுத் துறை நிறுவனமான, 'ஏர் இந்தியா' விமான போக்குவரத்து நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான இழப்பைச் சந்தித்து வருகிறது. நஷ்டத்தில் இயங்கிவரும் இந்நிறுவனத்தை ஏலம் விட்டு, முழுமையாக தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதில், ஏர் இந்தியா நிறுவனத்தின் ஊழியர்களும், அந்த நிறுவனத்தை வாங்க ஏலம் கோரியுள்ளனர். தனது வசமிருக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்க, கடந்த 2018ஆம் ஆண்டே மத்திய அரசு முயற்சி செய்தது.
ஆனால் அப்போது அந்தப் பங்குகளை வாங்க யாரும் முன்வரவில்லை. நிதி நெருக்கடியால் போராடிவரும் ஏர் இந்தியா நிறுவனத்தின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தத் தேவையான அளவு பங்குகளை வாங்க ஏர் இந்தியா ஊழியர்கள் குழு ஒன்று முன் வந்துள்ளது.
51 விழுக்காடு பங்குகளை வாங்கும் ஊழியர்கள்
அரசின் வசம் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை வாங்க ஏலம் கோருவதற்கான காலக்கெடு முடிந்தது. அதில் அமெரிக்காவில் இருந்து இயங்கும் முதலீட்டு நிறுவனமான இன்டரப்ஸ் (Interups) நிறுவனம் பங்குகளை வாங்க முன்வந்துள்ளது.
அந்த நிறுவனம் கோரியுள்ள ஏலத்தில் ஏர் இந்தியாவின் பங்குகளை 49 விழுக்காடு இன்டரப்ஸ் நிறுவனம் வைத்திருக்கும் என்றும், அதன் நிர்வாகத்தைக் கட்டுப்படுத்தத் தேவையான பெரும்பான்மை பங்கான 51 விழுக்காடு பங்குகளை அதன் ஊழியர்கள் வைத்திருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்டரப்ஸ் நிறுவனத்தின் தலைவர் லட்சுமி பிரசாத்
இதுதொடர்பாக இன்டரப்ஸ் நிறுவனத்தின் தலைவர் லட்சுமி பிரசாத் கூறுகையில், "ஏர் இந்தியா நிறுவனத்தை கணிசமான அளவில் உரிமம் கொண்டிருக்கத் தேவையான பங்குகளை அதன் ஊழியர்களுக்கு நாங்கள் வழங்குகிறோம்.
ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் செலவாகும் பணம் அனைத்தையும், நாங்கள் பார்த்துக் கொள்வோம். முதலீட்டு செலவுகள் எதையும், ஏர் இந்தியா ஊழியர்கள் வழங்க தேவையில்லை. ஏர் இந்தியா ஊழியர்கள் மற்றும் அதன் நிர்வாகத்தை விட வேறு யாருக்கும் அந்த நிறுவனத்தைப் பற்றி நன்றாக தெரியாது" என்றார்.
ஏர் இந்தியா நிறுவனத்தின் தொழில்நுட்பம் மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றை புதிதாக வாங்குபவர்கள் பெரியளவில் முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என்று ஏர் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் செயல் இயக்குனர் ஜிதேந்திர பார்கவா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நடப்பாண்டு(2021) ஜனவரி மாதம் ஏலத்தில் வெற்றி பெற்றவர்கள் குறித்த விவரத்தை இந்திய அரசு வெளியிடும் விரைவில் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ம.பி.யில் 35 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1600 கோடி பயிர் இழப்பீட்டு தொகை