2018ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள சனிவர்வாடா கோட்டையில் பீமா கோரேகான் போரின் 200 ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் வன்முறை ஏற்பட்டது.
இதுகுறித்து விசாரணை நடத்திய புனே காவல் துறை, எல்கர் பரிஷத் பகுதியில் வன்முறை தூண்டும் வகையில் சிலர் பேசியதாலேயே இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததாகக் கூறி, சுதிர் தவாலே, ரோனா வில்சன் உள்ளிட்ட ஒன்பது சமூக செயற்பாட்டாளர்கள் மீது சட்டப்பிரிவு 124 ஏ (தேச துரோகம்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கானது ஜனவரி 24ஆம் தேதி புனே காவல் துறையிடமிருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், ஏற்கனவே குற்றஞ்சாட்டப்பட்ட ஒன்பது பேருடன் கௌதம் நவலாகா, ஆனந்த் டெல்டும்ப்டே ஆகிய எழுத்தாளர்கள் மீதும் தற்போது முதல் குற்ற அறிக்கையை என்ஐஏ பதிவு செய்துள்ளது. முன்னதாக, இவர்கள் இருவர் மீதும் புனே காவல் துறை கைதுசெய்தனர். இருவரும் அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். பின்னர், உச்ச நீதிமன்ற இருவரையும் விடுவித்தது. இந்நிலையில், இவர்கள் இருவர் மீதும் என்ஐஏ மீண்டும் வழக்குப்பதிவு செய்துள்ளது.
இவர்கள் மீது ஐபிசி 13 (சட்டவிரோத நடவடிக்கைகள்), 15 (பயங்கரவாத நடவடிக்கைகள்), 39 (உபா சட்டம்) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், புனே காவல் துறை பதிவுசெய்த தேச துரோக குற்றச்சாட்டை, என்ஐஏ பதிவு செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நாட்டை அதிரவைத்த 'பீமா கோரேகான்' கலவர வழக்கின் தற்போதைய நிலை என்ன?