இந்தியாவில் மின்வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதன்படி, யூனியன் பட்ஜெட் 2019இல் மின்சார வாகனங்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் வழங்கியதால், பெரும்பான நிறுவனங்கள் மின்சார வாகனங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு மின்சார் சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், கேரள மாநிலத்தில் ஏற்கனவே திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களில் மின்சார சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அடுத்ததாக கொல்லத்திலும் மின்சாரம் சார்ஜிங் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
மக்கள் மின்சார வாகனங்களை உபயோகம் செய்வதை ஊக்குவிக்கும் நோக்கத்திலே அரசு தரப்பில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. கொல்லம் சார்ஜிங் ஸ்டேஷனில் ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்களின் பேட்டரிகளை சார்ஜ் செய்து கொள்ள முடியும். சுமார் 30 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த நிலையத்தில், இரு சக்கர வாகனத்திற்கு 20 வாட் சார்ஜிங் வசதி, காருக்கு 80 வாட் சார்ஜிங் வசதி என இரண்டு அலகுகள் உள்ளன. இதற்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில், வரும் 2022ஆம் ஆண்டிற்குள் 10 லட்சத்துக்கும் அதிகமான மின்சார வாகனங்கள் கேரளாவில் இயங்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன். மேலும், மின்சார சார்ஜிங் நிலையங்கள் அமைக்க 20க்கும் மேற்பட்ட இடங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.