ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது பாஜக கூட்டணியிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி வரும் மே மாதம் முடிவடைவதால், அம்மாநிலத்தில் உள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் தேதிகளை இன்று தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இது குறித்த அறிவிப்பை தற்போது, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். அதில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஐந்து கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 30ஆம் தேதி 13 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல், டிசம்பர் 7ஆம் தேதி இரண்டாம் கட்டம், டிசம்பர் 12ஆம் தேதி மூன்றாவது கட்டம், டிசம்பர் 16ஆம் தேதி நான்காம் கட்டம், கடைசியாக டிசம்பர் 20ஆம் தேதி ஐந்தாம் கட்டம் என ஐந்து கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நவம்பர் 13ஆம் தேதி முதல் தொடங்குகிறது என அறிவித்தார்.
மேலும், நாட்டிலேயே முதல்முறையாக, ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலின்போதுதான், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்குத் தபால் வாக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மகாராஷ்டிரா, ஹாரியான சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் மும்மரமாக பரப்புரையில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.