டெல்லி: பிலிப்பைன்ஸ் நாட்டை தலைமையிடமாக கொண்ட ஆசிய அபிவிருத்தி வங்கியின் புதிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு லாவாசா தேர்தல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அளித்துள்ள ராஜினாமா கடிதத்தில், “ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் பணியிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இது தொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை தரப்பில் எவ்வித அறிக்கைகளும் வெளியாகவில்லை.
தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஏப்ரல் 2021இல் ஓய்வு பெற்ற பின்னர் லாவாசா இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஆவதற்கான அடுத்த இடத்தில் இருந்தார்.
இந்நிலையில், தனது பதவிக் காலம் முடிவதற்கு முன்பாக பதவி விலகிய இரண்டாவது தேர்தல் ஆணையர் சுனில் அலாசா ஆவார்.
கடைசியாக 1973ஆம் ஆண்டு தலைமைத் தேர்தல் ஆணையர் நாகேந்திர சிங், தி ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் தனது பதவிக்காலம் முடியும் முன்பாகவே ராஜினாமா செய்தார்.
அசோக் லாவாசா:
அசோக் லாவாசா 1980ஆம் ஆண்டு பேட்சில் ஹரியானாவில் ஐ.ஏ.எஸ் அலுவலராக பணியில் சேர்ந்தவர் ஆவார். அவர் 2018ஆம் ஆண்டு ஜனவரியில் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
முன்னதாக, ஜூன் 2016 முதல் அக்டோபர் 2017 வரை இந்தியாவின் நிதி செயலாளராக பதவி வகித்தார். இது தவிர, இந்தியாவின் சுற்றுச்சூழல் செயலாளராகவும், விமானப் போக்குவரத்து செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.
லாவாசா ஆஸ்திரேலியாவின் சவுத் கிராஸ் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகளில் எம்ஃபில் பட்டமும் பெற்ற இவர், டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் இளங்கலை பட்டமும், ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டமும் முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எல்லை பாதுகாப்பு படையின் தலைமை இயக்குநராக சிபிஐ முன்னாள் சிறப்பு இயக்குநர் நியமனம்!