நாடு முழுவதும் ஏழுகட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தலும், தமிழ்நாட்டில் 18 சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது. அனைத்து கட்சியினரும் தங்களது பகுதியில் வாக்கு சேகரிப்பதற்காக பொதுமக்களுக்கு பணப்பட்டுவாடா, மது பாட்டில்களை வழங்குவது வழக்கம். தேர்தல் பறக்கும் படையினர் பணம் விநியோகத்தைத் தடுப்பதற்காக வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரியிலிருந்து தமிழகப்பகுதிக்கு அதிக அளவில் மது கடத்தல்கள் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது. தேர்தல் நன்னடத்தை விதியை முன்னிட்டு புதுச்சேரி நகரம், எல்லையோரங்களில் மத்திய பாதுகாப்புப் படையினர், புதுச்சேரியைச் சேர்ந்த காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், இன்று அந்தோணியார் கோயில் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் 10-க்கும் மேற்பட்ட பைகளில் பேருந்தில் ஏற்றுவதற்காக, அங்குச் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பைகளை உருளையன்பேட்டை காவல் நிலைய காவல் துறையினர் சோதனையிட்டனர். அந்தப் பைகளில் 490-க்கும் அதிகமான மது பாட்டில்கள் தமிழ்நாட்டிற்குக் கடத்துவதற்காக எடுத்துவரப்பட்டது தெரியவந்தது . இதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் மது பாட்டில்களை உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனை விசாரித்த ஆய்வாளர் தனசெல்வம் மது பாட்டில்களை யார் புதுச்சேரியிலிருந்து தமிழ்நாட்டிற்குக் கடத்தி செல்ல எடுத்துவந்துள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.