புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் முகக்கவசம் அணியாமல் வருபவர்களிடம் அடாவடியாக பணம் வசூல் செய்யும் காவலர்கள், நகராட்சி ஊழியர்களின் செயலைக் கண்டித்து சமூக செயற்பாட்டாளர்கள், பல்வேறு கட்சியினர் பலமுறை ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தனர்.
இச்சூழலில் எம்.ஓ.ஹெச். பெட்ரோல் பங்க் அருகில் நகராட்சி ஊழியர்கள் முகக்கவசம் அணியமல் வருபவர்களிடம் வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருந்தனர். அச்சமயம் அவ்வழியாக வந்த ஒரு முதியவரிடம் 'முகக்வசம் அணிய வில்லை, அபராதத் தொகையை கட்டி விட்டுச் செல்' என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அம்முதியவர் 'நான் இப்பொழுதுதான் முகக்கவசத்தை கழட்டினேன்' என்று கூறியும் கேட்காமல் அவர் கையில் வைத்திருந்த பையை பிடிங்கி எறிந்தனர். வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள் முதியவரை தாக்கியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த பதிவு தற்சமயம் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், முதியவரை தாக்கிய நகராட்சி ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்படி வசூல் செய்யும் பணம் எங்கு செல்கின்றது என்பது கேள்விக்குறியாகவே இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
‘முகக்கவசம் அணியாமல் வருபவர்களிடம் பணம் வசூல் செய்கின்றனர்.பணத்தை பெற்றுக்கொண்டு ஒரு முகக்கவசமாவது அளித்தால் நன்றாக இருக்கும்' என்கின்றனர் சமூக செயற்பாட்டாளர்கள். இது நடைமுறைக்கு வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.