இணையத்தில் குவிந்து கிடக்கும் வெளிப்படையான ஆபாசப் படங்கள், பதின்ம வயது இளைஞர்களை தவறு செய்யத் தூண்டி விடுகின்றன. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தகவல் தொழிற்நுட்பம் குறித்த விழிப்புணர்வு போதுமான அளவு இல்லை.
இங்கு செல்போன்கள் குப்பை போன்று குவிந்து கிடக்கின்றன. மலிவு விலையில் ஸ்மார்ட்போன்கள் என ஒவ்வொரு நிறுவனங்களும் கூவிக் கூவி விற்கின்றன. இந்தத் தகவல் தொழிற்நுட்ப சாதனங்கள் முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா?
நிச்சயமாக இல்லை. இதற்கு கடந்த காலங்களில் நடந்த ஏராளமான சம்பவங்கள் சாட்சி. உத்தரகாண்டில் பள்ளி மாணவியை சக மாணவர்கள் பத்து பேர் பாலியல் ரீதியாக துன்புறுத்தினர்.
வழக்கை விசாரித்த காவலர்களுக்கு அடுத்த அதிர்ச்சி. அன்றைய தினம் மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து பாலியல் காணொலிகளை கண்கொட்டாமல் ரசித்துள்ளனர். அதன் பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட பாலியல் ரீதியான கிளர்ச்சி, அவர்களை குற்றவாளிகள் ஆக்கி விட்டது.
இருபத்து ஏழே (27) வயதான பெண் கால்நடை மருத்துவர் நான்கு பேரால் கொடூரமான பாலியல் துன்பத்துக்கு உள்ளாக்கப்பட்டு, பெட்ரோல் ஊற்றி தீயிட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவத்தை செய்த சமூக விரோதிகள் காவலர்களின் துப்பாக்கிக் குண்டுக்கு இரையானார்கள். ஆனாலும் இச்சம்பவத்திலும் பாலியல் காணொலிகளும் ஒரு குற்றவாளியாக உள்ளது. பாலியல் வன்புணர்வுக்கு முன்னர், அதீத மது போதையும் பாலியல் காணொலிகளையும் அவர்கள் ரசித்துள்ளனர். அதன் பின்னர்தான் இந்தக் கொடூரமான குற்றம் அறங்கேறி உள்ளது.
இந்தச் சம்பவங்கள் வாயிலாக நமக்கு ஒன்று மட்டும் தெளிவாகிறது. பெண்களுக்கு எதிரான குற்றத்துக்கும் பாலியல் காணொலிகளுக்கும் நிச்சயம் தொடர்பு உள்ளது. தற்போதைய சூழலில் வீட்டில் அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட்போன் தவழுகிறது.
இணைய வசதியும் குறைவான விலையில் கிடைக்கிறது. பெற்றோர் வீட்டில் இல்லாத சமயம், தனி அறை என ஆபாசப் பட பிரியர்களின் உலகம் மிகச் சிறியது. ஆம், அவர்களால் அந்த படத்தை ரசிக்க முடியும். ஆனால், வாழ முடியாது.
இந்த ரசனை அவர்களின் வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாக அளித்து விடும் என்கின்றனர் விவரமறிந்த மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள். உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூன் பள்ளியில் நடந்த பாலியல் வன்கொடுமைக்குப் பின்னர், 827 பாலியல் இணைய தளத்தின் முகவரிகள் முடக்கப்பட்டன.
தற்போது இந்தப் பிரச்னை மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் பாலியல் இணைய தளங்களை முடக்க காவல் அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேபோல் தெலங்கானா காவலர்களும் பாலியல் பட இணைய தள முகவரிகளை முடக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த முயற்சிக்கு வழக்கம் போல் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. எது எப்படியிருந்தாலும் ஆபாச இணைய தளங்களால் விளைவுகள் மோசமாக உள்ளது. ஆகவே, அதனை கட்டுப்படுத்தாவிட்டாலும், முறைப்படுத்துதல் அவசியம்.
இதையும் படிங்க : ஹேக்கர்களால் இணையத்தில் கசிந்த தம்பதியின் ஆபாச வீடியோ!