கேரளாவில் வெள்ளம் பாதிக்கப்பட்ட 121 குடும்பங்களுக்கு ராமோஜி குழுமம் சார்பில் கட்டப்பட்ட வீடுகளின் பயனாளர்களுக்கு நாளை கேரள முதலமைச்சரால் வழங்கப்படுகிறது. கேரள அரசின் வீடு புனரமைப்புத் திட்டதிற்கு அடுத்தபடியாக இந்த திட்டம்தான் இரண்டாவது பெரியத் திட்டமாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதத்தின் பருவ மழையின்போது ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் கேரளாவின் பல்வேறுப் பகுதிகள் நீரில் மூழ்கின. குறிப்பாக ஆலப்புழா பகுதி கடும் பாதிப்பிற்குள்ளான நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான புனரமைப்புப் பணியில் ராமோஜி குழுமம் ஈடுபட்டது.
'குடும்பஸ்ரீ' என்ற தன்னார்வ அமைப்புடன் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 121 குடும்பங்களுக்கு, வீடு கட்டும் பணியை ராமோஜி குழுமம் மேற்கொண்டது. 40 நாட்களுக்குள் 121 வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், நாளை (9.2.2020) இந்த வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளன.
'ஈநாடு' புனரமைப்பு நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட, இந்த நலத்திட்டத்தை ஆலப்புழா மாவட்டத்தின் சார் ஆட்சியர் கிருஷ்ணா தேஜா தொடர்ச்சியாக மேற்பார்வையிட்டார். 7.7 கோடி ரூபாய் மதிப்பில் இந்தத் திட்டம் நிறைவடைந்துள்ளது. மீண்டும் வெள்ளம் ஏற்பட்டால் பாதிக்காத வண்ணம் அனைத்து வீடுகளும் அடித்தளத்திலிருந்து ஒன்றரை மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளன.
குஜராத் பூகம்பம், தமிழ்நாடு சுனாமி, ஆந்திரா ஹுட் ஹுட் புயல் உள்ளிட்ட பல்வேறு பேரிடர் காலத்தின் போது ஈநாடு குழுமம் இதுபோன்ற பல்வேறு தொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
நாளை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், ராமோஜி குழுமத்தின் ஈநாடு நிர்வாக இயக்குநர் சி.ஹெச். கிரண், மார்கதரிசி சிட்பண்ட்ஸ் நிர்வாக இயக்குநர் சைலஜா கிரண் உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
இதையும் படிங்க: திவால் சட்டத்தின் மூலம் ரூ.4 லட்சம் கோடி வசூல் - பாஜக அமைச்சர் பெருமிதம்