வடக்கு கேரளாவின் பல்வேறு துறைகளின் தொழிலாளர் தேவையைப் பூர்த்தி செய்யும் கூட்டுறவு சங்கமாக, 1925ஆம் ஆண்டில், உரலுங்கல் தொழிலாளர் ஒப்பந்த கூட்டுறவு சங்கம் லிமிடெட் உருவாக்கப்பட்டது. ஆசியாவின் மிகப்பெரிய தொழிலாளர் கூட்டுறவு நிறுவனங்களில் ஒன்றாக இன்று திகழ்கின்ற யூ.எல்.சி.சி.எஸ், கட்டுமான மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான பணிகளுக்கு தேவையான மனித வளங்களை பெருமளவில் வழங்குகிறது.
இத்தகைய கூட்டுறவு சங்கத்தின் அலுவலகத்தோடு கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் தனிச் செயலாளர் சி.எம். ரவீந்திரனுக்கு வணிக தொடர்புகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக இந்த யூ.எல்.சி.சி.எஸ் அலுவலகத்தில் அமலாக்கத்துறை இன்று (நவ.30) திடீர் சோதனை மேற்கொண்டதாக தகவல் வெளியானது. இந்த தகவல் பல்வேறு தொலைக்காட்சிகளில் முக்கிய செய்தியாக மாறியது.
இது தொடர்பாக அக்கூட்டுறவு சங்கத் தலைவர் பி.ரமேஷ் கூறுகையில், “உரலுங்கல் தொழிலாளர் ஒப்பந்த கூட்டுறவு சங்க அலுவலகத்தில் அமலாக்க இயக்குநரகம் ரெய்டு நடத்தியதாக ஊடகங்களில் சொல்லப்படுவது உண்மையில்லை. அமலாக்கத்துறையின் சார்பில் அலுவலகத்திற்கு ஒரு அலுவலர் மட்டுமே வந்தார். அவர் கூட்டுறவு சங்க பதிவுகளை ஆய்வு செய்தார். அவர்கள் எங்கள் வருமான வரி கோப்புகளை ஆராய்ந்தனர்

அமலாக்கத்துறையினரின் விசாரணை வளையத்தின் கீழ் உள்ள யாருடனாவது ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்று எங்களை கேட்டனர். அவர்களுடன் எங்கள் யாருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நாங்கள் கூறினோம்” என்றார்.
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் ரவீந்திரனுக்கும் தொடர்பிருப்பதாக, தேசிய புலனாய்வு முகமையால் கைதுசெய்யப்பட்டுள்ள கேரள மூத்த ஐஏஎஸ் அலுவலர் சிவசங்கர் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க : 'விவசாயிகளுக்காகப் பேசுங்கள்' - அடக்குமுறைகளுக்கு எதிராக காங்கிரசின் பரப்புரை!