டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் நரேஷ் ஜெயின், நீண்ட நாள்களாக ஹவாலா மோசடியில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின்படி, பல ஏஜன்சிகள் அவரை தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். 2016இல் அந்நிய செலவாணி சட்டத்தை மீறியதாக குற்றச்சாட்டி அமலாக்க இயக்குனரகம் சார்பில் 1,200 கோடி ரூபாய் நோட்டிஸ் அனுப்பட்டது. பல விதமான குற்றங்களை ரகசியமாக செய்துவரும் ஜெயின், ஒரு முறை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தால் முன்பு கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பல கோடி ரூபாய் மதிப்பிலான ஹவாலா பரிவர்த்தனை ஒப்பந்தங்களுடன் தொடர்புடைய விசாரணைக்காக தொழிலதிபர் நரேஷ் ஜெயினை அமலாக்க இயக்குனரக அலுவலர்கள் கைது செய்துள்ளனர். இவர் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் எனத் தெரிகிறது.
இவ்வழக்கை பொறுத்தவரை தொழிலதிபர் நரேஷ் ஜெயினின் 600க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளும், சுமார் 11 ஆயிரம் கோடிக்கு மேல் வெளிநாட்டிற்கு நடைபெற்ற பரிவர்த்தனைகளும் ஏஜென்சி கண்காணிப்பில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.