தன்னைத் தானே கடவுளாக பிரகடனப்படுத்திக்கொண்டு வலம்வந்த சாமியார் நித்யானந்தா, பாலியல் புகார், காணொலிகள் வாயிலாக பெரும்பான்மை மக்களால் அறியப்படுபவர். அவர் மீது கர்நாடகா, குஜராத்தில் வழக்குகள் உள்ளன.
குஜராத்தில் சிறுமிகளைக் கடத்திவைத்தல், பெண்களை பாலியல் ரீதியாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் அவர் மீது உள்ளன. இந்த நிலையில் அவர் வெளிநாடு தப்பித்துச் சென்றுவிட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் ஈகுவடார் அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி 'கைலாசம்' என்ற புதிய தீவை உருவாக்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இந்தத் தகவலை ஈகுவடார் தூதரகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
மேலும் இதுபோன்று செய்திகளை எங்கள் நாட்டுடன் தொடர்புபடுத்தி வெளியிட வேண்டாம் எனவும் தூதரகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் நித்யானந்தா கரீபியன் தீவான ஹெய்தி தீவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஓஷோ போன்று பல சர்ச்சைகளுடன் நித்யானந்தா வலம்வந்தார். இவரது ஆசிரமத்தில் பல பாலியல் வன்கொடுமை, சிறுவர் துஷ்பிரயோகம் நடப்பதாகப் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. நித்யானந்தா என்னும் பெயர் கொண்ட ராஜசேகரன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராவார்.