இதுகுறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய இந்தியா ரேட்டிங் என்ற சந்தை மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மைப் பொருளாதார நிபுணர் சுனில் சின்ஹா, "ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, படிப்படியாக இயல்புநிலை திரும்பிவரும் சூழலில், அரசு அறிவித்துள்ள நிவாரணத் திட்டங்கள் பொருளாதாரப் பிரச்னைக்கான தீர்வாக அமையாது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
2008, 2018-19 ஆண்டுகளில் நிலவிய பொருளாதார மந்தநிலைக்கு மாறாக, உலகப் பொருளாதாரத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சுணக்கம் சந்தையில் ஏற்பட்ட கோளாரால் உண்டாகவில்லை. மாறாக, சுகாதாரப் பேரிடரின் விளைவாக ஏற்பட்டுள்ளது. ஆகையால், கரோனாவுக்கு மருத்துவ தீர்வு காணப்படும் வரை பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாது.
மத்திய அரசு, ரிசர்வ் வங்கி ஆகியவை எடுக்கும் நடவடிக்கைகளால் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கத்தை ஓரளவுக்குக் குறைக்கலாம். சில துறைகள் மீண்டெழலாம். ஆனால், அனைத்தும் இயல்புநிலைக்குத் திரும்பிவிடும் என்பது சாத்தியமற்ற ஒன்று" என்று கூறினார்.
கரோனா ஊரடங்கு காரணமாக இறங்குமுகத்தில் உள்ள பொருளாதாரத்தை மீட்டு இந்தியாவை தற்சார்பு நாடாக மாற்ற, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த மாதம் 20 லட்சம் ரூபாய் கோடி மதிப்பில் பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை அறிவித்தது. இதையடுத்து, இம்மாத தொடக்கம் முதல் ஊரடங்கு படிப்படியாகத் தளர்தப்பட்டுவருகிறது. ஆனால், கரோனா பாதிப்பு நாட்டில் குறையாமல் தீவிரமடைந்து வருவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : லேஸ், குர்குரே அடைக்கப் பயன்படும் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை!