தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், அவரது மகள் சுப்ரியா சுலே ஆகியோருக்கு மாநிலங்களவைத் தேர்தலின்போது சமர்பித்த ஆவணங்கள், சொத்துக்கணக்குத் தொடர்பில் கேள்வியெழுப்பி வருமான வரித் துறையினர் நோட்டீஸ் ஒன்றை நேற்று (செப்.22) அனுப்பியுள்ளனர்.
இது குறித்து மும்பையில் செய்தியாளர்களிடையே கருத்து தெரிவித்த சரத்பவார், "2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தல்களின் போது நான் தாக்கல் செய்த தேர்தல் விண்ணப்ப மனுவில் (அபிடவிட்) ரூ.32.1 கோடி சொத்து உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தேன். அந்த அடிப்படையில் ஏதோ சில விளக்கங்களைக் கேட்டு இப்போது திடீரென வருமான வரித் துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
மத்திய பாஜக அரசை எதிர்த்து கேள்விக் கேட்கும் எங்களைப் போன்ற எதிர்க்கட்சிகளின் மீது அவர்களுக்கு உள்ள அன்பையே இது வெளிப்படுத்துகிறது.
வருமான வரித்துறையினர் அனுப்பியுள்ள நோட்டீஸ் தொடர்பாக எனது தெளிவுபடுத்தல் மற்றும் விளக்கத்தை விரைவில் நாங்கள் அளிப்போம். தேர்தல் ஆணையம் வேறு, வருமான வரி வேறு என யாரும் சொல்லக்கூடாது" என்றார்.
இந்நிலையில் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள குறிப்பில், "ஸ்ரீ சரத்பவாருக்கு இத்தகைய நோட்டீஸ் வழங்க சிபிடிடிக்கு எந்த உத்தரவையும் இந்திய தேர்தல் ஆணையம் வழங்கவில்லை. வருமான வரித் துறை அனுப்பிய நோட்டீசுக்கும், எங்களுக்கும் தொடர்பு இல்லை" எனத் தெரிவித்துள்ளது.
முன்னதாக, மத்திய அரசு மாநிலங்களவையில் நிறைவேற்றிய வேளாண் தொடர்பான 3 சட்ட முன்வடிவுகளை சரத்பவார் கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.