காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு மாறிய எம்எல்ஏக்களின் தொகுதிகளுக்கும் ஏற்கனவே காலியாகவுள்ள தொகுதிகளுக்கும் நவம்பர் 3ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தாப்ரா தொகுதியில் பரப்புரை செய்த மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கமல்நாத், பாஜக பெண் அமைச்சர் குறித்து இழிவாகப் பேசினார். இதற்கு எதிர்ப்பு வலுத்துவரும் நிலையில், கமல் நாத்தை நட்சத்திர பரப்புரையாளர் பட்டியலிலிருந்து தேர்தல் ஆணையம் அதிரடியாக நீக்கியுள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை, "தேர்தல் விதிகளைத் தொடர்ந்து மீறிய காரணத்தாலும் வழிமுறைகளை மதிக்காத காரணத்தாலும் கமல்நாத்துக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பரப்புரையாளர் அந்தஸ்து திரும்ப பெறப்படுகிறது. நட்சத்திர பரப்புரையாளராக அவர் பரப்புரையில் ஈடுபட அனுமதி வழங்கப்படாது.
இனி அவர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டால், அது குறித்த அனைத்து செலவுகளையும் எந்தத் தொகுதியில் பரப்புரையில் ஈடுபடுகிறாரோ அந்தந்த வேட்பாளர்களே ஏற்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.