திருச்சூர்: தேநீர் அருந்திய பிறகு அந்த பிஸ்கட் கப்பை சாப்பிடலாம். இந்த பிஸ்கட் கப் கேரளா மாநிலம் திரிச்சூர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் விற்கப்படும் 'பிஸ்கட் டீ' மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
எதிலும் புதுமை புகுத்துவது கேரள மக்களின் அடையாளமாக இருந்துவருகிறது. அந்த வகையில், தேநீர் விற்பனையிலும் புதுமை புகுத்தியுள்ளனர். இந்தச் சிறப்பு தேநீர் பற்றிய செய்திகளும் படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன. திருச்சூர் நகரத்தின் ஸ்வராஜ் ரவுண்டானா அருகிலுள்ள ஏ.ஆர். மேனன் சாலையில் இருக்கிறது ராதாகிருஷ்ணா பேக்கரி.
இந்த பேக்கரிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயமாக ஒரு புதிய அனுபவத்தை தரும். டீயை உறிஞ்சி வடையை கடித்து பழக்கப்பட்டவர்கள், பிஸ்கட் கப் டீயை கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த கரோனா காலத்திலும் ராதாகிருஷ்ணா பேக்கரியில் மக்கள் கூட்டம் அலைமோதிக்கொண்டே இருக்கிறது.
ராதாகிருஷ்ணா பேக்கரியில் தேநீர், ‘பிஸ்கட்’ டீ கப்பில் வழங்கப்படுகிறது, இது வாடிக்கையாளர்கள் தேநீர் அருந்திய பிறகு சாப்பிடலாம். ஒரு பிஸ்கட் கப் டீ 20 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த பிஸ்கட் கப் டீ பார்க்க சூடான தேநீரால் உருகிவிடுவதுபோல் காட்சியளித்தாலும், சுமார் 20 நிமிடங்கள் வரை கசியாமல் தாக்குப் பிடிக்கிறது.
பிஸ்கட் கப் டீயை ரசித்து, ருசித்து சாப்பிட இளைஞர்கள் முதல் பெரியோர் வரை ராதாகிருஷ்ணா பேக்கரியை நோக்கிப் படையெடுத்துவருகிறார்கள்.
இது குறித்து ராதாகிருஷ்ணா பேக்கரியின் உரிமையாளர் பிரசாந்த் கூறுகையில், "பிஸ்கட் கப் டீ வழங்கப்பட்ட நாள் முதலே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து நல்லபடியாக ரசித்து ருசித்து சாப்பிட்டுவருகின்றனர்.
இந்த பிஸ்கட் டீ கப் தற்போது ஹைதராபாத்திலிருந்து கொண்டுவரப்படுகிறது. வரவிருக்கும் நாள்களில், சுவையான பிஸ்கட் டீ கப்களை அறிமுகப்படுத்த திட்டங்கள் உள்ளன. வெண்ணிலா மற்றும் சாக்லேட் வகைகளில் பிஸ்கட் டீ கப்பை வழங்க முயற்சித்துவருகிறோம்" என்றார்.
இதையும் படிங்க: 'ஸ்டாலின் சொல்வதற்காக நிவாரணம் கேட்க வேண்டிய அவசியமில்லை' - கே.பி.அன்பழகன்