கரோனா பரவலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அமெரிக்கா, மெக்சிகோ, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கரோனா பரவல் இன்னும் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை.
கரோனா பரவல் குறித்த ஆராய்ச்சிகளும் உலகெங்கும் நடைபெற்றுவருகிறது. அதன்படி அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சார்பில் வைரஸ் பரவல் குறித்து அறிந்துகொள்ள, டாக்டர் பாத்திமா தாவூத் தலைமையில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது.
அதில் சீனா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளுக்கு சென்றுவந்தவர்கள் மூலமே பல நாடுகளிலும் வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு குறித்து பாத்திமா தாவூத் கூறுகையில், "ஒரு சில வைரஸ் பாதித்த நாடுகளுக்கு பயணம் செய்தவர்கள் மூலமாக, பல்வேறு நாடுகளில் வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது எங்கள் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது" என்றார்.
கரோனா பரவியது எப்படி?
மேலும், வைரஸ் பரவல் ஏற்பட்ட முதல் 11 வாரங்களில் பல்வேறு நாடுகளில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவ்வாறு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு விழுக்காட்டினர் சீனா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்தவர்கள் என்பதும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இத்தாலி நாட்டிற்கு சென்று வந்தவர்களில் 27 விழுக்காட்டினரும், சீனா சென்று வந்தவர்களில் 22 விழுக்காட்டினரும், ஈரான் சென்று வந்தவர்களில் 11 விழுக்காட்டினரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஆரம்பகட்டத்தில் ஆப்பிரிக்காவில் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் சரி பாதியும், ஐரோப்பாவில் 36 விழுக்காட்டினரும், அமெரிக்காவில் 38 விழுக்காட்டினரும் இத்தாலிக்கு சென்று வந்தவர்கள்.
அதேபோல மேற்கு பசிபிக் நாடுகளில் கரோனா பாதிக்கப்பட்டவர்களில் 83 விழுக்காட்டினர் சீனா சென்று வந்தவர்கள். கிழக்கு மத்தியத்தரைக் கடல் பகுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 44 விழுக்காட்டினர் ஈரானுக்கு சென்று திரும்பியவர்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்க காலத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வயது சராசரியாக 51ஆக இருந்துள்ளது. அதேபோல 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களில் மூன்று விழுக்காட்டினர் மட்டுமே இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி தயாரிப்பில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது - மத்திய சுகாதார அமைச்சகம்