கரோனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுபானக் கடைகள், பார்கள் ஆகியவை செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளன. அரசின் உத்தரவால் குடிமகன்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவர்களின் சோகத்தைப் போக்கும் வகையில் சிலர் மதுவைத் திருடி விற்கும் வேலையில் இறங்கியுள்ளனர்.
அவ்வாறு திருடி விற்று இன்று கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் ’பிரபல’ நபர் குறித்தது தான் இந்தச் செய்தி. தெலங்கானாவைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மது பாட்டில்களை பெண்கள் உள்பட சிலருக்கு வழங்கியுள்ளார். தவளை தன் வாயால் கெடும் என்ற பழமொழிக்கேற்ப சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காக, பாத்தாயா ஊரடங்கிலும் மது வழங்குகிறேன் என்று கெத்தாகக் கூறி வீடியோ எடுத்து பதிவேற்றியுள்ளார்.
இந்த வீடியோ அவர் நினைத்தது போலவே அதிரிபுதிரியாக சமூக வலைதளங்களில் ஹிட்டடிக்க, காவல் துறையினர் கண்ணில் வசமாக சிக்கிக்கொண்டார். சிவாஜி படத்தில் லிவிங்ஸ்டன் கையில் விலங்கை எடுத்துக்கொண்டு பாட்டு பாடிக்கொண்டே செல்வது போல் சென்று காவலர்கள் அந்நபரை கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.
அவரிடம் ஏன் இப்படி செய்தாய் என்று விசாரிக்கையில், சமூக வலைதளங்களில் தனது வீடியோவுக்கு லைக் கிடைக்கவே அப்படி செய்தேன் என்று கூறியது காவலர்களையே ஒரு நிமிடம் அசைத்துப் பார்த்தது. பஞ்சாப்பில் ஒருவர் இதேபோன்று வீடியோ வெளியிட்டு பிரபலமடைந்ததால் தானும் அவ்வாறு செய்ததாக அவர் கூறியுள்ளார். ஆனால் வீடியோ வெளியிட்டு, தனக்கு வரும் லைக்ஸ்களை எண்ண நினைத்த அவருக்கு எண்ணுவதற்கு கிடைத்தது என்னவோ சிறையின் கம்பிகள் தான்.