கரோனா தடுப்பூசி அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதி விரைவில் வழங்கப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியான நிலையில், அதற்கான ஒத்திகை நாடு முழுவதும் ஜனவரி இரண்டாம் தேதி முதல் நடைபெறவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை செயலாளர் அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளின் உயர் மட்ட அலுவலர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
டிசம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில், முதல்கட்ட ஒத்திகை நான்கு மாநிலங்களில் எந்த வித இன்னலுமின்றி நடைபெற்றதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மட்டும் ஒத்திகை நடைபெறும் என கூறப்படுகிறது. இதில் கலந்துகொள்பவர்களுக்கு போலி தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒத்திகை நடைபெறவுள்ளது. உண்மையான விநியோகத்தின்போது குறைபாடுகள் ஏற்படும்பட்சத்தில் அதனை முன்னரே களையும் வகையில் இந்த ஒத்திகை நடத்தப்படுகிறது.
கடந்த டிசம்பர் 29ஆம் தேதி, சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில், "கரோனா தடுப்பூசி ஒத்திகையில் கலந்துகொண்ட நான்கு மாநிலங்கள் செயல்முறை குறித்து திருப்தி தெரிவித்துள்ளன" என குறிப்பிடப்பட்டிருந்தது. புத்தாண்டு அன்று கரோனா தடுப்பூசி அவசர பயன்பாட்டிற்கான அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.