காஷ்மீர் லே பகுதியில் உள்ள பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சி அமைப்பு (டிஆர்டிஓ), கிழக்கு லடாக் பிராந்தியத்தில், 17 ஆயிரம் அடி உயரத்தில் 170 கிலோகிராம் எடையை சுமையை சுமக்கும் திறன்கொண்ட, இரட்டைத்திமிழ் ஒட்டகம் அல்லது பாக்டீரிய ஒட்டகங்களை பயன்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து டிஆர்டிஓ விஞ்ஞானி பிரபு பிரசாத் சாரங்கி கூறுகையில், " உள்ளூர் விலங்குகளான இரட்டைத்திமிழ் ஒட்டகங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இந்த ஒட்டகங்களால் தடையின்றி எவ்வளவு எடையை சுமக்கும் என்பதை ஆய்வு செய்தோம். சீன எல்லை அருகே லடாக்கின் கிழக்கு பகுதியில் 17 ஆயிரம் அடி உயரத்தில் நடந்த ஆய்வில் 170 கிலோ எடையை சுமந்துகொண்டு சுமார் 12 கி.மீ., தூரம் சுமந்து செல்ல முடியும் என்பதை கண்டறிந்தோம்.
இந்த இரட்டைத்திமிழ் ஒட்டகங்களுடன் ஒற்றைத்திமிழ் ஒட்டகங்களை ஒப்பிட்டு பார்த்தோம். இந்த ஒட்டகங்களால் மூன்று நாள்களுக்கு உணவு, தண்ணீர் இல்லாமல் உயிர்வாழ முடிகிறது" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், " இந்த ஒட்டகங்கள் விரைவில் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு இந்திய - சீன எல்லையில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. ஒட்டகங்களின் எண்ணிக்கையும் தற்போது குறைவாக உள்ளதால், அதை அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். எண்ணிக்கை அதிகரித்ததும் ராணுவத்தில் இரட்டைத்திமிழ் ஒட்டகங்கள் இணைக்கப்படும்" எனத் தெரிவித்தார்.