இந்தியாவில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள மத்திய அரசு, மாநிலங்களுக்கிடையே ரயில் மற்றும் விமானப் போக்குவரத்திற்கு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், வியாழக்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தொலைபேசி வாயிலாக சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் பேசியுள்ளார். அப்போது, "கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்துவருவதால் மாநிலங்களின் எல்லைகளை தற்போது திறக்கக்கூடாது.
ரயில் மற்றும் விமானப் போக்குவரத்தை முழு வீச்சில் தொடங்குவதற்கு முன் மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனையில் ஈடுபட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
மேலும், மாநில அரசுகள் கடன் வாங்க அனுமதிக்கப்பட்டுள்ள வரம்பை மூன்று விழுக்காட்டிலிருந்து ஐந்து விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள நான்காம் கட்ட ஊரடங்கு வரும் மே 31ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், ஊரடங்கு குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களின் கருத்துகளையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை தொலைபேசி வாயிலாகக் கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: டெல்லி துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் மூவருக்கு கரோனா!