வாரணாசி எம்பியான பிரதமர் நரேந்திர மோடி தனது தொகுதி மக்களுக்கு இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் உரை நிகழ்த்தினார். ஆப்கானிஸ்தான் காபூலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் தனக்கு வருத்தமளிப்பதாக தெரிவித்த அவர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "வாரணாசி மக்களவை தொகுதி உறுப்பினரான நான் இம்மாதிரியான சூழலில் உங்களுடன் இருந்திருக்க வேண்டும். ஆனால், டெல்லியில் என்ன நடைபெறுகிறது என்பது உங்களுக்கு தெரியும். ஓய்வில்லாத நேரத்திலும் கூட எனது சக அலுவலர்களிடம் தொகுதி குறித்து கேட்டறிவேன். நவராத்திரியின் முதல் நாளான இன்று நீங்கள் பிரார்த்தனை மேற்கொள்வதில் பரபரப்பாக இருப்பீர்கள்.
இருந்தபோதிலும், என்னுடைய உரையை கேட்க நீங்கள் நேரம் ஒதுக்கியுள்ளீர்கள். அதற்கு நன்றி. கரோனா வைரஸ் நோயை எதிர்த்து போராட மக்களுக்கு தன்னம்பிக்கை அளிக்க வேண்டும் என பிரார்த்தனை மேற்கொள்கிறேன். சில சமயங்களில் முக்கியமானவற்றுக்கு மக்கள் முக்கியத்துவம் அளிக்க மாட்டார்கள்.
இதேதான், இந்தியர்களும் செய்கின்றனர். வதந்திகளை நம்ப வேண்டாம் என மக்களை கேட்டுக் கொள்கிறேன். பணக்காரர், ஏழை என நோய் பாகுபாடு பார்க்கவில்லை. யோகா, உடற்பயிற்சி செய்பவர்களும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் நோய் குறித்த சரியான தகவல்களை மக்களிடையே கொண்டு போய் சேர்க்க 9013151515 என்ற வாட்ஸ்அப் எண் வழங்கப்பட்டுள்ளது. மகாபாரத போர் 18 நாள்களில் முடிவடைந்தது. கரோனாவுக்கு எதிரான போர் 21 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.
21 நாள்களில் போரை வென்று காட்டுவது நமது நோக்கமாக இருக்க வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டவர்களுக்கு யாரேனும் பாகுபாடு காண்பித்தால், அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்.
இம்மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில், மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ஒத்துழைக்காதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்துறை அமைச்சகத்தை கேட்டுக் கொண்டுள்ளேன்" என்றார்.
இதையும் படிங்க: அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்தக விற்பனை நிலையங்களுக்கு தடை விலக்கு!