உத்தரப்பிரதேசத்தின் புலந்த்ஷஹரில் இரண்டு சாதுக்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சிவ சேனா கட்சி கண்டித்துள்ளது. மேலும், அந்தச் சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தவேண்டும் எனவும் கோரியுள்ளது.
சிவ சேனா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி இச்சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், 'உத்தரப்பிரதேசத்தில் சாதுக்கள் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். சில ஊடகங்கள், கீ போர்ட் போராளிகள் இந்த விஷயத்தை வகுப்புவாதமாக மாற்ற முயற்சிக்காதீர்கள்' எனத் தெரிவித்திருந்தார்.
சிவ சேனா கட்சியின் மூத்தத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத், புலந்த்ஷஹரில் இரண்டு சாதுக்கள் கொல்லப்பட்டது கண்டிக்கத்தக்கது. பால்கர் சாதுக்கள் கொலையை வகுப்புவாத கலவரமாக மாற்ற முயற்சித்ததைப் போல், இந்த விஷயத்தையும் வகுப்புவாத கலவரமாக மாற்ற முயற்சிக்க வேண்டாம்' எனத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், பால்கரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, இரண்டு சாதுக்கள் உட்பட மூவர் கொலை செய்யப்பட்டனர். சில அரசியல்வாதிகள், அந்த தாக்குதலை வகுப்புவாதக் கலவரம் என்று கூறுகின்றனர். மேலும், அந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களின் பெயர்களை வெளியிடுங்கள். அது வகுப்புவாதக் கலவரமா அல்லது இல்லையா என்பது தெரிந்துவிடும் எனவும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மக்கள், புலந்த்ஷஹர் மாவட்டத்திலுள்ள பாகோனா கிராமத்திலுள்ள சிவன் கோயிலுக்குச் சென்றபோது, அங்கு இரு சாதுக்கள் கொலைசெய்யப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இதுகுறித்து விசாரணை செய்து கொலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நிதி ஆயோக் அலுவலருக்கு கரோனா வைரஸ் ...!