கோவிட் 19 வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதைத் தடுக்க அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவிட் 19 வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த ரயில்வே துறை சார்பிலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, காய்ச்சல் மற்றும் சளி உள்ளவர்கள் ரயில்களில் உணவுகளைக் கையாளுவதற்கு அனுமதி இல்லை என்று ஐஆர்சிடிசி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அறிவிப்பு அனைத்து மண்டலங்களுக்கும் பொருந்தும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "உணவைக் கையாளுபவர்கள் அதற்கான மாஸ்குகளையும், கையுறைகளையும் கண்டிப்பாக அணிய வேண்டும். மேலும், உணவைக் கையாளுபவர்கள் தேவையின்றி மற்றவர்களைத் தொடக்கூடாது. அவர்கள் அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும். முகத்தை தொடுவதையும் அவர்கள் குறைத்துக்கொள்ள வேண்டும்" என்றும் ஐஆர்சிடிசி-இன் இயக்குநர் பிலிப் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கோவிட் 19 வைரஸ் அச்சம் காரணமாக ரயில்களிலுள்ள ஏசி வகுப்புகளில் வழங்கப்பட்டுவந்த கம்பளிகள் தற்காலிகமாக வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனாவால் மும்பையில் பொதுபோக்குவரத்து முடங்கும் அபாயம்!