அயோத்தி வழக்கில் கடந்தாண்டு (2019) நவம்பர் 9ஆம் தேதியன்று, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக ஸ்ரீராம் ஜென்ம பூமி தீர்த் ஷேத்ரா எனும் அறக்கட்டளையை உருவாக்க, மத்திய அமைச்சரவை பிப்ரவரி 5 ஆம் தேதி அனுமதி வழங்கியது.
இந்த அறக்கட்டளைக்கு மூத்த வழக்குரைஞரும், முன்னாள் சொலிசிட்டரான கே.பராசரன், ஜகத்குரு சங்கராச்சார்யா, ஜோதிஸ்பீதாதீஸ்வர் சுவாமி வாசுதேவானந்த் சரஸ்வதிஜி மகராஜ் (அலகாபாத்), ஜகத்குரு மாதவாச்சார்யா சுவாமி விஸ்வா பிரசன்னதீர்த் ஜி மகராஜ் , உடுப்பி பெஜாவர் மடம், ஹரித்வாரின் யுகபுருஷ் பரமானாந்த் ஜி மகராஜ், புனேவைச் சேர்ந்த சுவாமி கோவிந்த கிரி ஜி மகராஜ் , அயோத்தியைச் சேர்ந்த விமலேந்திர மோகன் பிரதாப் மிஸ்ரா, ஹோமியோபதி மருத்துவர் அனில் மிஸ்ரா, பாட்னாவைச் சேர்ந்த கமாஸ்ஸவர் சவுபால், நிரமோகி அஹாராவின் மகந்த் தினேந்திர தாஸ், அயோத்தி பைதக் ஆகிய 15 அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அறக்கட்டளை தனி நபரிடம் இருந்து நன்கொடை, மானியம், உதவிகள் என எந்தவிதமான பங்களிப்பையும் நிபந்தனையின்றி ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கோவில் கட்டுமானத்திற்காக, பொதுமக்களிடம் இருந்து நன்கொடை பெற அறக் கட்டளையின் சார்பில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டது.
இந்நிலையில், அயோத்தியில் கட்டப்பட இருக்கும் ராமர் கோவிலுக்கு வழங்கப்படும் நன்கொடை தொகைக்கு வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு 80ஜி(2) (பி) கீழ் வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று, மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக அந்த வாரியம் வெளியிட்ட அறிவிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து இருக்கிறது.
முன்னதாக, ராமர் கோவில் கட்டுவதற்கு வழிவகை செய்யப்பட்ட நன்கொடை தொகைக்கு வருமான வரி சட்டத்தின்கீழ் வரி விலக்கு கிடைக்கும் என, அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்தது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க : கரோனாவுக்கு எதிராகப் போராட நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதே ஒரே வழி!