கரோனா வைரஸ் உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்திவருகிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,007 பேர் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,387 ஆக அதிகரித்தது. இதனிடையே பேசிய ராகுல் காந்தி, "கோவிட்-19 வைரஸ் பரவலை ஊரடங்கால் மட்டும் கட்டுப்படுத்த முடியாது. ஊரடங்கு என்பது ஒரு தற்காலிகத் தீர்வு மட்டுமே. ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டவுடன் வைரஸ் மீண்டும் பரவும் அபாயம் உள்ளது.
இந்தியாவில் போதிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. பரிசோதனை விகிதம் நமது நாட்டில் மிகக் குறைவாக உள்ளது. கோவிட்-19 வைரசுக்கு எதிரான ஒரே ஆயுதம், பரிசோதனைகளை அதிகப்படுத்துவது மட்டுமே. மருத்துவப் பரிசோதனைகளை நாம் விரைவில் அதிகரிக்க வேண்டும்" என்றார்.
இந்தக் கருத்தை ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "கரோனா வைரசுக்கு எதிராக நாடு போராடிக் கொண்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் மத்திய அரசை விமர்சித்து வருகிறது.
விமர்சனம், அறிவுரைகள் கூறுவதற்குப் பதில், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நிதியளிக்கலாம். நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் நிதியளிக்கவில்லை" என்றார்.
இதையும் படிங்க: கரோனாவை தடுக்க தொழில்நுட்ப கருவி