COVID-19 தொற்று நோயைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கு, கடந்த மார்ச் மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, உள்நாட்டுப் பயணிகளின் விமான செயல்பாடுகள் இரண்டு மாதங்களுக்கு நிறுத்தப்பட்டன. இந்நிலையில் நேற்று (மே 25) மீண்டும் உள்ளூர் விமான சேவைகள் தொடங்கப்பட்டன.
ஆந்திரா மற்றும் மேற்கு வங்காளத்தைத் தவிர, மற்ற எல்லா மாநிலங்களிலிருந்தும் உள்நாட்டு விமானங்கள் நேற்று முதல் நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன.
உள்நாட்டு விமான சேவைகளை மீண்டும் மே 25 முதல் தொடங்குவதாக அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்திருந்தது. எனினும், மேற்கு வங்க அரசு ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்டுள்ளதால், அதன் அத்தியாவசிய உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை மீட்டெடுக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, அம்மாநிலத்தில் விமான சேவைகள் மே 28ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
விமான சேவை தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே நாடு முழுவதும் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
மேலும் சேவை தொடங்கிய முதல் நாளே பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் குழம்பிப்போயினர். இது தொடர்பாக ரத்து செய்யப்பட்ட விமானங்களின் கட்டணம் விரைவில் பயணிகளிடம் வந்து சேரும் என விமானத்துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே விமானங்களின் செயல்பாட்டிற்கான குறிப்பிட்ட விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (DGCA) வெளியிட்டுள்ளது. வழிகாட்டுதல்களில் டிக்கெட் விலை நிர்ணயம், பயணிகள் முகமூடி அணிவது, போர்டு விமானங்களில் உணவு இல்லை என்பன குறிப்பிட்டத்தக்க வழிகாட்டுதல்கள் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
'ஆரோக்யா சேது' செயலி பயன்பாட்டின் மூலம் அல்லது சுய அறிவிப்பு படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலம் பயணிகளின் மருத்துவ நிலைமைகள் குறித்த விவரங்களையும் சிவில் ஏவியேஷன் இயக்குநரகத்துக்கு (Directorate General of Civil Aviation) வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களின் தயாரிப்பு அதிகரிப்பு - சுகாதாரத்துறை அமைச்சகம்