கடந்த மே 22ஆம் தேதி பாயல் தட்வி என்ற மருத்துவ மாணவியின் கனவு காற்றோடு கரைந்து போனது. மகாராஷ்டிர மாநிலம் ஜல்கோன் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மாணவி பாயல், மும்பையில் உள்ள டோபிவாலா மருத்துவக் கல்லூரியில் பெண்கள் நல மருத்துவம் படித்துவந்தார். மருத்துவப் படிப்பை முடித்த பின்பு பழங்குடியின மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என எண்ணற்ற கனவுகளோடிருந்த பாயல், மே 22ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது கல்லூரி சீனியர்கள் மூவர் சாதியை சொல்லி திட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளான பாயல், இந்த முடிவை எடுத்துள்ளார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஊடகங்கள் பாயல் தற்கொலை குறித்து பரவலாக செய்திகளை வெளியிட்ட வண்ணம் இருந்தன. காவல்துறையினர் பாயல் தட்வியை தற்கொலைக்குத் தூண்டியதாக கூறப்படும் பக்தி மெஹ்ரா, ஹேமா அகுஜா, அங்கிதா கண்டேல்வால் ஆகியோரை கைதுசெய்து காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இவ்வளவு நடந்த பின்பு இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் அதன் உறுப்பினர்களுக்குக் கடிதம் அனுப்பப்பட்டது. அதில், மருத்துவத்துறையில் சாதியம் உள்ளதென யாரும் தெளிவற்றுப் பேச வேண்டாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து இந்திய மருத்துவர்கள் சங்கத் தலைவர் சாந்தனு சென், பொதுச் செயலாளர் ஆர்.வி. அசோகன் ஆகியோர் அளித்த பேட்டியில், இந்திய மருத்துவத்துறையில் சாதிய ஒடுக்குமுறை உள்ளது என்பதை ஒப்புக்கொள்ள முடியாது என்றே தெரிவித்தனர்.
இந்திய மருத்துவத் துறையில் சாதிய பிரச்னை உள்ளது என்பதற்கு சாட்சியங்களும் தற்கொலைகளும் சான்றாக இருந்தபோதிலும், இந்திய மருத்துவர்கள் சங்கம் அனுப்பிய கடிதத்தில் அது அறவே மறுக்கப்பட்டிருந்தது. எனினும் ஒரு ஓரமாக, மருத்துவத்துறையில் சாதியம் இருந்தால் பொறுத்துக் கொள்ளமாட்டோம் என பூசி மொழுகியிருந்தார்கள்.
சாந்தனு சென், ஆர்.வி. அசோகன் இணைந்து அளித்த பேட்டியில், இந்திய மருத்துவத்துறை சகோதரத்துவம் பேணுவதில் பல மைல்கள் முன்னோக்கி இருக்கிறது. அது சாதி, மதம், அரசியல் கடந்தது என்றனர். அவர்களின் பொதுவான கருத்து என்னவென்றால், மருத்துவத்துறையில் சாதியம் என்பது கிடையாது. மருத்துவத்துறையில் இருப்பவர்கள் வேலைப்பளுவின் காரணமாக மன அழுத்தம் அதிகரிப்பதால்தான் தற்கொலை செய்கிறார்கள் என்றனர்.
கொல்கத்தா மருத்துவமனையில் தாக்கப்பட்ட மருத்துவருக்காக ஜூன் 17ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளது இந்திய மருத்துவர்கள் சங்கம். அதன் அறிவிப்பை ஏற்று அனைத்து அரசு, தனியார் மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றனர். பாயல் தட்வியின் தற்கொலைக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. இந்திய மருத்துவர்கள் சங்கம் கள்ள மௌனத்தைக் கலைத்து, பாயல் தட்வியின் குடும்பத்துக்கு நீதி கிடைக்க போராட்டத்தை அறிவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்திய சமூகம் சாதிய கட்டமைப்புக்குள் சிக்கித் தவிக்கிறது. சாதி ஒழிப்பை முன்னெடுத்து இந்த மண்ணில் எத்தனையோ இயக்கங்கள் தோன்றியிருந்தாலும், அது நீங்கா அழுக்காக மனிதர்களின் மனதில் புரையோடிக் கிடக்கிறது.