மத்தியப் பிரதேச மாநில தலைநகர் போபாலில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) பணிபுரியும் இரண்டு மருத்துவர்கள், மருத்துவமனையில் இருந்து பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது காவலர்களால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் ஈடிவி பாரத்துடன் பேசுகையில், “நாங்கள் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது காவலர்கள் எங்கள் வாகனத்தை தடுத்து நிறுத்தினார்கள். இதையடுத்து நாங்கள் மருத்துவர்கள் என்பதையும், பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கிறோம் என்ற தகவலையும் தெரிவித்தோம்.
எங்களது அடையாள அட்டையையும் காண்பித்தோம். ஆனால் அவர்கள் எங்கள் பேச்சைக் கேட்கவில்லை. அவர்களால் நாங்கள் தாக்கப்பட்டோம்” என்றனர். காவலர்களால் தாக்கப்பட்ட இரு மருத்துவர்களும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று பின்னர் வீடு திரும்பினர்.
காவலர்கள் தாக்கியதில் ஒருவர் பெண் மருத்துவர் ஆவார். இந்த மருத்துவர்கள் காவலர்கள் மீது புகார் அளித்துள்ளனரா என்பன போன்ற வேறு தகவல்களை அவர்கள் வெளிப்படுத்தவில்லை. மருத்துவமனை நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி அவர்கள் மேற்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவார்கள் என தெரியவருகிறது.
கரோனா (கோவிட்-19) வைரஸ் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு நாட்டில் 21 நாள்கள் பூட்டுதல் அமலில் உள்ள நிலையில் மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்களுக்கு 144 தடை உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் அவர்கள் இந்த சுகாதார நெருக்கடியை முன்னணியிலிருந்து கையாளுகிறார்கள்.
இதையும் படிங்க: அமெரிக்க வாழ் இந்தியர்களை மீட்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு!