இந்தியாவில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துவருகிறது.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் வரும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களைத் தவிர மற்றவர்களுக்குப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தேசிய தலைநகர் பகுதியிலுள்ள காசியாபாத்தில் ஒருவருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதாரப் பணியாளர் ஒருவர் கூறுகையில், "காசியாபாத்தில் இந்திராபுரம் பகுதியைச் சேர்ந்த புற்றுநோய் மருத்துவர் ஒருவருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர் டெல்லியின் சகேத் பகுதியிலுள்ள மேக்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிவருகிறார். வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் பணியாற்றிய அதே மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது" என்றார்.
இதையடுத்து மருத்துவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், அவர் இருந்த பகுதி கிருமி நாசினிகள் மூலம் சுத்தப்படுத்தப்பட்டது.
மருத்துவர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்பிலிருந்தவர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டுவருவதாக சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காசியாபாத் பகுதியில் 32 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டெலிவரி பாய்க்கு கரோனா - தனிமைப்படுத்தப்பட்ட 72 குடும்பங்கள்!