இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் வேகமாக பரவிவருகிறது. அதிலும், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், குஜாராத் ஆகிய மாநிலங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தெற்கு டெல்லியில் 50 வயது மருத்துவர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல்துறையினர் தற்கொலை செய்துகொண்ட மருத்துவரின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர் ராஜேந்திர சிங் என்றும் துர்கா விஹாரில் க்ளினிக் நடத்திவந்ததும் தெரியவந்தது. பின்னர் இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதனிடையே, க்ளினிக் மட்டுமின்றி ராஜேந்திர சிங், டேங்கர் தொழிலிலும் ஈடுபட்டுவந்துள்ளார்.
இந்த தொழிலில் செல்வாக்கு மிகுந்த நபர்கள் சிலர், அவருக்கு தொடர்ந்து பிரச்னை கொடுத்து வந்ததால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார் என ராஜேந்திர சிங்கின் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் இதுகுறித்து காவல்துறை சார்பில் எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
இதையும் படிங்க: ஊரடங்கால் தள்ளிப்போன திருமணம்: பெண் தற்கொலை!