பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த அக்டோபர் 28ஆம் தேதி, முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு (நாளை) நவம்பர் மூன்றாம் தேதி நடைபெற உள்ளது. இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் முடிவடைந்தது.
பிரதமர் மோடி நேற்று நான்கு பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது, காஷ்மீர் விவகாரத்தை முன்வைத்தும் லாலு பிரசாத் யாதவின் குடும்ப ஆட்சி காரணமாக பிகார் இருண்ட காலத்தை சந்தித்ததாகவும் அவர் விமர்சித்தார்.
இதனைக் கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் மூத்தத் தலைவர் சிதம்பரம், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தலைவர்கள் முக்கியப் பிரச்னைகள் குறித்து வாய் திறப்பதில்லை எனத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "நீங்கள் பிகாரில் வாக்காளராக இருக்கும்பட்சத்தில், வேலைவாய்ப்பு, புதிய தொழிற்சாலைகள், உணவு தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, பயிர் காப்பீடு, வெள்ள நிவாரணம், பெண்கள் பாதுகாப்பு குறித்து அவர்கள் (பாஜக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள்) வாய் திறந்தார்களா?
அதற்குப் பதில் இல்லை. ஒன்றுமே இல்லாததுக்கு வாக்களிக்கும்படி பாஜக கூட்டணி தலைவர்கள் கோரிக்கைவிடுக்கின்றனர். சூரிய கடவுள், கங்கா ஆகியவற்றின் பெயரில் அவர்கள் வாக்கு கேட்கிறார்கள். ராமர் கோயில், காஷ்மீர் சிறப்புத் தகுதி ரத்து, குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவை குறித்து மோடி பேசுகிறார்" என்றார்.
இதையும் படிங்க: உ.பி. குழந்தைகள் காப்பகத்தில் 48 மணி நேரத்தில் 3 குழந்தைகள் உயிரிழப்பு!