கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பல இந்தியர்கள் வெளிநாடுகளில் சிக்கித் தவித்து வருகின்றனர். இந்நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த திமுக எம்பிக்கள், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு தலைமையில் சென்ற திமுக எம்பிக்கள் டெல்லியில் உள்ள ஜெய்சங்கர் அலுவலகத்தில் நேற்று சந்தித்து பேசினர்.
இதுகுறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் கூறுகையில், "கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஈரான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்திய மீனவர்களையும் மாணவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்பிக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளோம். இதுகுறித்து மனுவையும் அளித்துள்ளோம்" என்றார்.
அம்மனுவில், "கோவிட் 19 நோயால் பிலிப்பைன்ஸ் நாட்டில் தமிழ்நாட்டு மாணவர்கள் சிக்கித் தவித்துவருகின்றனர். கடந்த சில நாள்களாக தமிழ்நாட்டு மீனவர்கள் ஈரானில் சிக்கியுள்ளனர். எனவே, வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க சிறப்பு விமானத்தை அந்தந்த நாடுகளுக்கு அனுப்ப வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்த மீனவர்கள் குழு ஜெய்சங்கரை சந்தித்து இதேபோன்ற கோரிக்கையை விடுத்தனர்.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பை மறைத்த ரயில்வே ஊழியர் இடைநீக்கம்