தஞ்சை, திருச்சி, நாகை உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் பழனிசாமி சமீபத்தில் அறவித்திருந்தார். இது தொடர்பாக இன்று மாநிலங்களவையில் பேச திமுக உறுப்பினர்கள் முயன்றனர். ஆனால், அவர்களுக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் மாநிலங்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்ச சிவா கூறுகையில், "திருச்சி, நாகை உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். ஆனால் இது தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாடு எங்களுக்குத் தெரியவில்லை.
ஒரு குறிப்பிட்ட பகுதி வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டால், அந்தப் பகுதிகளில் எந்தவொரு தொழிற்சாலைகளும் கட்டப்படக்கூடாது. ஆனால் டெல்டா பகுதியில் செயல்பட மத்திய அரசு ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கு அனுமதியளித்துள்ளது. வேதாந்தா நிறுவனமும் அப்பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுப்பது தொடர்பாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.
முதலமைச்சரின் அறிவிப்பில் மத்திய அரசின் நிலைப்பாட்டை அவர்கள் எங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். மேலும், அப்பகுதியில், எந்த மாதிரியான தொழிற்சாலைகள் செயல்படலாம், எவை செயல்படக்கூடாது என்பது குறித்தும் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
அரசுக்கு எதிரான குரல்களை அவர்கள் ஒடுக்குவது நாடாளுமன்றத்திலும் தொடர்கிறது. அரசுக்கு எதிரான பேச்சுக்களைக்கூட ஒளிபரப்ப மறுக்கின்றனர். மாநிலங்களின் பிரச்னை குறித்து எங்களால் நாடாளுமன்றத்திலும் பேச முடியவில்லை என்றால் எங்குதான் இதுகுறித்து விவாதிக்க முடியும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் முன் அரசு தனது முடிவை கூறும்போது மட்டுமே, அது ஒரு அங்கீகாரத்தைப் பெறும். அமைச்சர்களைத் தனிப்பட்ட முறையில் சந்திப்பது சரியான நடைமுறையாகாது" என்றார்.
இதையும் படிங்க: உச்ச நீதிமன்றத்தின் இடஒதுக்கீடு கருத்துக்கு எம்.பி.கள், அமைச்சர்கள் கண்டனம்