காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்குரிய சட்டப்பிரிவு 370ஐ நீக்குவதற்கு முன்பாக, அங்குள்ள எதிர்க்கட்சித் தலைவர்களை வீட்டுக் காவலில் மத்திய அரசு அடைத்தது. அதில், முன்னாள் முதலமைச்சர்களான ஃபரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்டோரும் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டனர்.
தலைவர்களை வீட்டுக்காவலில் வைத்திருப்பதை கண்டித்து நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை விடுவிக்குமாறும் போராட்டம் நடத்தினர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஃபரூக் அப்துல்லாவை மீட்குமாறு ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு மீதான விசாரணையின்போது, பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஃபரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில், திமுக உறுப்பினர் டி.ஆர். பாலு, சட்டத்திற்கு புறம்பாக கைது செய்யப்பட்டுள்ள ஃபரூக் அப்துல்லாவை விடுவிக்க வேண்டும் என்று குரல் எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், இன்று ஃபரூக் அப்துல்லாவை விடுவிக்கக்கோரி அனைத்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர்.
இதையும் படிங்க: காஷ்மீர் விவகாரத்தில் எவ்வளவு செலவு? உள்துறை அமைச்சகம் பதில்